ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020 லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு அரிய தோல்வியைச் சந்தித்தது, ஆனால் இந்தத் தோல்வி அணித்தேர்வினாலும், புதிரான முடிவுகளினாலும் ஏற்பட்டது என்றுதான் கூற வேண்டியுள்ளது.
கொல்கத்தா வெளியேற சன் ரைசர்ஸ் காரணமானது என்பதை விட மும்பை இந்தியன்ஸ்தான் காரணம் என்றே கூறத் தோன்றுகிறது.
தொடை காயம் சரியாகவில்லை என்று அனைவரும் கூறி வரும் நிலையில் ரோஹித் சர்மா களமிறங்கியது ஏன் என்பது மிகப்பெரிய கேள்வி. மேலும் ஒரு போட்டியில் பும்ரா, போல்ட், ஹர்திக் பாண்டியா என முக்கியமான வீரர்களை ட்ராப் செய்யும் போது சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாது.
கொல்கத்தா ஒருவேளை வெல்லக் கடினமான அணியாக இருக்கலாம் என்று மும்பை, நேற்று அவ்வளவு ஆர்வம் காட்டமால் ஆடியிருக்கலாம் என்பதே ரசிகர்கள் பெரும்பாலோனோரின் கருத்தாக இருக்கிறது.
இந்நிலையில் டேவிட் வார்னர் கூறும்போது, “கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிரான அந்தப் பயங்கரத் தோல்விக்குப் பிறகு இந்த வெற்றி நிம்மதியளிக்கிறது.
நிச்சயமாக அவர்கள் முக்கிய வீரர்கள் சிலருக்கு ஓய்வு அளித்தனர். ஆனால் அப்படியுமே அவர்களை 150க்கும் கீழ் கட்டுப்படுத்தியது, அதுவும் இந்த ஷார்ஜாவில் உண்மையில் சாதனைதானே.
நிறைய இடது கை வீரர்கள் இருக்கும் மும்பைக்கு எதிராக நதீம் 4 ஒவரில் 18 ரன்கள்தான் கொடுக்கிறார் என்றால் அது தனித்துவம் அல்லவா.
2016ம் ஆண்டு தொடரிலும் ஒவ்வொரு போட்டியையும் வென்றால்தான் டைட்டில் வெல்ல முடியும் என்ற நிலை இருந்தது. இந்த அணி எவ்வளவு உண்ர்வுடன் ஆடுகின்றனர் தெரியுமா? நல்ல தொடக்கம் கொடுத்தது குறித்து எனக்குப் பெருமையே.
ஆர்சிபி ஒரு அபாயகரமான அணி, பல அபாய வீரர்கள் அதில் உள்ளனர். 2016 இறுதிப் போட்டியில் அவர்களை வீழ்த்தினோம். இன்னொரு வாழ்வா சாவா போட்டி, ஆனால் இந்த வெற்றியின் உத்வேகத்தை அந்த போட்டிக்கும் கடத்திச் செல்வோம்” என்றார்.