தென் ஆப்பிரிக்காவுக்கு அடுத்த மாதம் பயணம் செய்யும் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், சாம் கரன் ஆகியோருக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் இம்மாதம் இறுதியில் பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பின் டிசம்பர் 4 முதல் 9-ம் தேதிவரை 3 ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாட உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியபோது தனது தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவரைச் சந்திக்க நியூஸிலாந்துக்கு ஸ்டோக்ஸ் சென்றார். அங்கு 15 நாட்கள் தனிமையில் இருந்தபின் தந்தையின் உடல்நலத்தைக் கவனித்துக் கொண்டு 15 நாட்கள் இருந்தார். இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் 2-வது பாதியில்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்டோக்ஸ் பங்கேற்க முடிந்தது.
ஐபிஎல் தொடரில் கடுமையாக உழைத்த ஆர்ச்சர், சாம் கரன், ஸ்டோக்ஸ் ஆகியோரின் மனநலன், உடல்நலன் கருதி ஒருநாள் தொடருக்கு ஓய்வை இங்கிலாந்து அணி நிர்வாகம் அளித்துள்ளது.
அதேசமயம், டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட், வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் டி20 அணியில் இடம் பெறவில்லை.
வார்விக்ஸையர் வேகப்பந்துவீச்சாளர் ஒலே ஸ்டோன், லான்காஸையர் பேட்ஸ்மேன் லியாம் லிவிங்ஸ்டோன், சோம்ரெஸ்ட் ஆல்ரவுண்டர் லிவிஸ் கிரிகோரி ஆகியோர் ஒரு நாள் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்லும் இங்கிலாந்து அணி, தனிமை முகாமில் இருந்து கரோனா பரிசோதனை முடிந்து பயோ பபுள் சூழலுக்குள் செல்வார்கள். ரசிகர்கள் இல்லாமலேயே போட்டி நடத்தப்படுகிறது.
இங்கிலாந்து டி20 அணி விவரம்:
ஓயன் மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், ஜோனாத்தன் பேர்ஸ்டோ, சாம் கரன், ஜாஸ் பட்லர், டாம் கரன், கிறிஸ் ஜோர்டன், டாவிட் மலான், அதில் ரஷித், ஜேஸன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லே, மார்க் வுட்.
ஒருநாள் அணி விவரம்:
ஓயன் மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, ஜோனாத்தன் பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜாஸ் பட்லர், டாம் கரன், லீவிஸ் கிரிகோரி, லியாம் லிங்ஸ்டன், அதில் ரஷித், ஜோ ரூட், ஜேஸன் ராய், ஓலே ஸ்டோன், ரீஸ் டாப்ளே, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.