ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக அஜிங்கிய ரஹானே நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றியில் 60 ரன்கள் எடுத்தார். டெல்லி 6 விக்கெட்டுகளில் வென்றது.
ரஹானே இந்தத் தொடரில் முதலில் சில போட்டிகளுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ஷிகர் தவணுக்கும் ரஹானேவுக்கும் நல்ல புரிதல் இருந்ததைப் பார்க்க முடிந்தது.
பிரிதிவி ஷா கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை, மாறாக ரஹானேவுக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முதல் அரைசதத்தை அவர் எடுத்தார்.
இந்நிலையில் ஐபிஎல் டி20 டாட் காம் இணையதளத்துக்காக சக வீரர் ஷிகர் தவணிடம் ரஹானே உரையாடிய போது, “எனக்கு வாய்ப்பளிக்காதது கடும் ஏமாற்றத்தைத் தந்தது. வெறுப்படைந்தேன்.
அணிக்காக நேற்று பங்களித்தது மகிழ்ச்சியளிக்கிறது, அதுவும் உன்னோடு (தவண்) பேட் செய்ய வாய்ப்பு கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சி.
ரிக்கி பாண்டிங் என்னிடம் நீ 3-ம் நிலையில் இறங்கப் போகிறாய் என்றார், அது எனக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. இக்கட்டான நிலையில் இறங்கி அணிக்காக பங்களிப்புச் செய்வது நன்றாக உள்ளது அதிலும் அணி வென்றால் இரட்டை மகிழ்ச்சி” என்றார் ரஹானே.
டெல்லி கேப்பிடல்ஸ் தற்போது பிளே ஆஃப் சுற்றில் நம்பர் 1 மும்பை இந்தியன்ஸுடன் விளையாட வேண்டும், வென்றால் நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும்.