கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆக்ரோஷ அணுகுமுறைக்கு பதிலடி கொடுக்க அதை விட ஆக்ரோஷமாக ஆடும் முயற்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நேற்று 60 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் வீழ்ந்து பிளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறியது.
திவேத்தியா, ஜோப்ரா ஆர்ச்சர் தொடர் முழுதும் நன்றாக வீசினர், ஆனால் இவர்களுக்கு ஆதரவு இல்லை. ஸ்மித்தும் நேற்று ஷ்ரேயஸ் கோபாலை இருமுறை தவறாகப் பயன்படுத்தியதில் 38 ரன்கள் அவரது ஓவர்களில் விளாசப்பட்டதில் போய் முடிந்தது.
இந்நிலையில் வெளியேற்றம் பற்றி ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறும்போது, “இது 180 ரன்களுக்கான பிட்ச் என்றே நினைத்தேன். பவர் ப்ளேயில் 4 விக்கெட்டுகளை இழந்தால் மீள்வது கடினம்.
கமின்ஸ் நல்ல லெந்தில் வீசினார், எங்களை நல்ல ஷாட்களை தேர்வு செய்ய வைத்தார். எழுச்சித் தொடக்கம் கண்டு பிறகு கொத்தாக விக்கெட்டுகளை இழந்தோம். நன்றாகத் தொடங்கி விட்டு முடிவு இப்படி ஆனது துரதிர்ஷ்டவசமானது.
தொடரை நன்றாகத் தொடங்கினோம், இடையில் சரிந்தோம், பிறகு கடைசி 2 போட்டிகளில் வென்றோம். நேற்று டாப் 4 பொறுப்பு எடுத்துக் கொள்ளவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் ஜோப்ரா ஆர்ச்சர் பிரமாதம். திவேத்தியாவின் ஆல்ரவுண்ட் ஆட்டம் மிகப்பெரிய பாசிட்டிவ் அம்சம்.
தொடர் முழுதும் அட்டகாசமாக வீசினார் திவேத்தியா.. ஆர்ச்சருக்கும் இவருக்கும் மறுமுனையில் போதிய ஆதரவு இல்லை.” என்றார்.