அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020-ன் 50வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாபின் 186 ரன்கள் இலக்கை விரட்டி வெகுஎளிதாக ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் கேகேஆர், சன் ரைசர்ஸ் அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்பும் கொஞ்சநஞ்சம் உள்ளது. இதில் டாஸ் வென்ற ஸ்மித் பிட்சின் தன்மையைப் புரிந்து கொண்டு முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
எல்லாவற்றுக்கும் மேலாக கெய்ல் ராகுல் கிரீசில் இருந்தும் பெரிய அளவில் அவர்களை எழும்ப விடாமல் 8 ரன்கள் என்ற ரேட்டிலேயே வைத்திருந்தனர். 1/1 என்ற நிலையிலிருந்து 120 ரன்களை ராகுலும், கெய்லும் சேர்த்தனர், இதில் பவுண்டரி இல்லாத ஓவர்களும் இருந்தன. இதனையடுத்து 15வது ஓவரில் ராகுல் 46 ரன்களில் ஆட்டமிழக்கும் போது ஸ்கொர் 121/2 என்றுதான் இருந்தது, கெய்ல் இருந்தார் ஆனாலும் கெய்லினால் நினைத்தபடி அடிக்க முடியவில்லை, பூரன் தான் 10 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 22 ரன்கள் விளாச கெய்ல் பிறகு பிக் -அப் செய்தார். ஆனால் 99-ல் அவர் ஆட்டமிழந்தார். 20வது ஒவரில்தான் அவர் ஆட்டமிழந்தார், ஆனாலும் கெய்ல் நின்றதற்கான பயனை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அடையவில்லை. 200 ரன்களுக்கும் மேல் சென்றிருக்க வேண்டும். 184 ரன்களில் முடங்கியது. இதனை 17.3 ஓவர்களில் ராஜஸ்தான் ஊதியது.
இது தொடர்பாக பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் கூறியது:
டாஸை தோற்றது பயங்கரமானது. பின்னால் விழுந்த பனிப்பொழிவு பேட்டிங்கை அவர்களுக்குச் சுலபமாக்கி விட்டது. ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு பந்து வறண்டு பற்றிக் கொள்ள சுலபமாக இருக்க வேண்டும், ஆனால் பனியினால் பந்து வழுக்கும் போது வீசுவது கடினம், ஸ்பின் செய்வது கடினம்.
ஆனால் நாங்கள் எடுத்த மொத்த ரன்கள் குறைவானது என்று கூற முடியாது. மோசமாக பந்து வீசினோம் என்றும் கூற முடியாது. ஆனால் ஈரப்பந்தில் பவுலிங் செய்யும் முறையை கற்றுக் கொள்ள வேண்டும். பனிப்பொழிவு கணிக்க முடியாததாக உள்ளது. இதனால் பனிப்பொழிவுக்கு நம்மை தயார் செய்து கொள்ள முடியாது.
மைதான பராமரிப்பாளரிடம் பேசினோம் அவரோ முந்தைய போட்டியில் பனிப்பொழிவே இல்லை என்றார். இந்த சீசனில் எதுவுமே சுலபமாக அமையவில்லை, நாங்கள் எடுத்த ஒவ்வொரு புள்ளிக்கும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. கடைசி ஆட்டம் வரை நம்மை கொண்டு வந்துள்ளதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
என்றார் கே.எல்.ராகுல்.