பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்ரவுண்டருமான ஷோயிப் மாலிக் 5 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.
பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 13-ம் தேதி அபுதாபியில் தொடங்குகிறது. அதில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணியில் 16-வது வீரராக மாலிக் இடம்பெற்றுள்ளார்.
இங்கிலாந்து தொடருக்காக கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் மாலிக் இடம்பெறவில்லை. ஆனால் ஷோயிப் மாலிக் நல்ல பார்மில் இருப்பதோடு, அனுபவம் வாய்ந்த வீரரும்கூட. அதனால் அவரை அணியில் சேர்க்குமாறு அணி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து அவர் 16-வது வீரராக சேர்க்கப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
கடைசியாக 2010-ல் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடிய மாலிக், இப்போது அஹமது ஷெஸாத், முகமது ஹபீஸ் ஆகியோரின் மோசமான பார்ம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிராக ஆடும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் ஹாரூன் ரஷித் கூறுகையில், “மிடில் ஆர்டரில் மாலிக் அனுபவம் வாய்ந்தவர். அவர் சுழற்பந்து வீச்சாளரும்கூட. அதனால் அவரை 5-வது பவுலராக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் மாலிக் அணிக்குத் தேவை என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். ஐசிசி தடை காரணமாக ஹபீஸ் பந்துவீச முடியாது என்பதால் 5-வது பவுலரின் அவசியத்தை நாங்கள் அனைவரும் உணர்ந்திருக்கிறோம்” என்றார்.