சஞ்சய் மஞ்சுரேக்கர் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மூலம் தற்போது கவன ஈர்ப்பு பெற்றவராக திகழ்கிறார். ஜடேஜாவை துண்டு துக்கடா வீரர் என்று கூறி தன் ஐபிஎல் வர்ணனை வேலையையே இழந்து விட்டார்.
ஆனாலும் அவரது விமர்சனங்கள் தணிந்தபாடில்லை. கே.எல்.ராகுல் ஐபிஎல் கிரிக்கெட்டில் அபாரமாக ஆடி வருகிறார், இவரைப் போன்ற வீரருக்கெல்லம் ஒரு டச் இருந்தால் போதும் டெஸ்ட், ஒருநாள், டி20 என்ற பேதமெல்லாம் இவர்களுக்குக் கிடையாது. அந்த அளவுக்கு தனது லெவலை வேறு மட்டத்துக்கு உயர்த்திக் கொண்டவர்தான் ராகுல்.
சேவாக் உள்நாட்டு கிரிக்கெட்டில் நான்கு டக்குகள் அடிப்பார், ஆனால் ஆஸ்திரேலியா கூட்டிச் சென்றல் சதம் கூட அடிப்பார், ராகுல் அந்த நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய டி20, ஒருநாள், டெஸ்ட் அணிகளில் ராகுல் மீண்டும் இடம்பிடித்துள்ளார். இதனையடுத்து சஞ்சய் மஞ்சுரேக்கர் அவரது டெஸ்ட் தேர்வை சாடியுள்ளார்.
மஞ்சுரேக்கர் தன் ட்விட்டர் பக்கத்தில், “ஐபிஎல் ஆட்டத்தை வைத்து டெஸ்ட் அணியில் ஒரு வீரரை தேர்வு செய்வதன் மூலம் தவறான முன்மாதிரியை உருவாக்குகிறீர்கள்.
குறிப்பாக ஒரு வீரர் தன் கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் மோசமாக சொதப்பியிருக்கும் நிலையில் அவரை டெஸ்ட் அணிகளில் எப்படி தேர்வு செய்ய முடியும்? அவர் மூன்று வடிவத்திலும் பிரமாதமாகக் கூட ஆடுபவராக இருக்கட்டும். அது பிரச்சினையில்லை. ஆனால் இப்படி ஐபிஎல் கிரிக்கெட்டை வைத்து டெஸ்ட் வீரரை தேர்வு செய்தால், ரஞ்சி ட்ராபிகளில் பிற உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் நன்றாக ஆடி திறமையை நிரூபிக்கும் வீரர்களின் ஊக்கத்தை அழிப்பதாகாதா” என்ற தொனியில் சாடியுள்ளார் மஞ்சுரேக்கர்.
ராகுல் தன் கடைசி 5 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் தொடக்க வீரராக 46, 2, 9, 82 மற்றும் 19 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.