விளையாட்டு

ஆஸி.க்கு பும்ராவின் டபுள் மெசேஜ்,- கோலியை இப்படியும் வீழ்த்தலாம், உங்கள் பேட்ஸ்மென்களையும் காலி செய்வேன்- ஷார்ட் பிட்ச் பந்தில் கோலியை விழுங்கிய பும்ரா-100 விக்.

இரா.முத்துக்குமார்

ஐபிஎல் தொடரில் ஆரம்பக்கட்டத்தில் சொதப்பிய பும்ரா தற்போது தன் பழைய வேகத்துக்கும் துல்லியத்துக்கும் திரும்பியுள்ளார். அவர் பந்துகளை ஆட முடியவில்லை. ஆரம்பத்தில் கமின்ஸ் பும்ராவை ஒரே ஓவரில் 4 சிக்சர்களை அடித்த போது பும்ரா அவ்வளவுதானா என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால் நேற்று உலகின் தலைசிறந்த பேட்ஸ்மென் விராட் கோலியே பும்ரா பந்து வீச்சில்திணறியதைப் பார்க்க முடிந்தது, விராட் கோலியும் பீல்டர் கைக்கு அடித்துக் கொண்டிருந்தார். ஏ.பி.டிவில்லியர்ஸையும் பவுன்சரில் திணறடித்தார் பும்ரா.

12வது ஓவரில் விராட் கோலியை ஷார்ட் பிட்ச் எகிறு பந்தில் காலி செய்தார், இந்த பரிசு விக்கெட்தான் ஐபிஎல் கிரிக்கெட்டில் பும்ராவின் 100-வது விக்கெட். இது ஒரு அருமையான ஷார்ட் பிட்ச் பந்து கோலி புல்ஷாட் ஆட முயன்றார் ஆனால் அவர் தன்னை சரியாக பொசிஷன் செய்து கொள்ள முடியவில்லை மட்டையின் விளிம்பில் பட்டு கொடியேற்றினார். ஷார்ட் பிட்ச் பந்து கோலியை நெருங்கும்போது பெரிதாக எகிறியது.

பிறகு 17வது ஓவரில் பும்ரா, ஷிவம் துபே (2) விக்கெட்டையும் 140 கிமீ வேக பவுன்சரில் வீழ்த்தினார், இதே ஓவரில் படிக்கால் (74) விக்கெட்டையும் லாங் லெக் கேட்சுக்கு கைப்பற்றி இரண்டு விக்கெட்டுகளைக் கொண்ட மெய்டன் ஓவராக பும்ரா மாற்றினார், அவரது கடைசி ஓவரையும் சுத்தமாக அடிக்க முடியவில்லை 5 ரன்கள்தான் வந்தது. பும்ரா 4 ஒவர் 1 மெய்டன், 14 ரன்கள் 3 விக்கெட். ஆட்ட நாயகன் விருது உண்மையில் பும்ராவுக்குத்தான் கொடுக்க வேண்டும். ஆனால் அதைவிடவும் இக்கட்டான தருணத்தில் இறங்கி வெளுத்து கட்டிய சூரிய குமார் யாதவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

கோலியின் பலவீனத்தை ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க தொடரில் பிலாண்டர் காட்டினார். அதே போல் நியூஸி தொடரிலும் அவரது பலவீனம் அம்பலமானது. இவர்களெல்லாம் கவுண்டமணி ’மாமன் மகள்’ படத்தில் சொல்வது போல் அதர் கண்ட்ரி, அதர் பீப்புள், ஆனால் பும்ரா சேம் கண்ட்ரி, ஆனால் அதர் ஸ்டேட். இவரே கோலியின் பலவீனத்தை அம்பலப்படுத்தி இங்கு இருக்கும் ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் ஸ்மித், ஏரோன் பிஞ்ச் ஆகியோருக்கும் கோலியை வீழ்த்துவதற்கான உத்தியை சூசகமாக சுட்டிக்காட்டியுள்ளார் பும்ரா.

பும்ரா இந்த பவுலிங்கின் மூலம் ஆஸ்திரேலிய தொடருக்கு இரட்டை மெசேஜ்களை அனுப்பி உள்ளார், ஒன்று ஷார்ட் பிட்ச் பந்தில் விராட் கோலியின் பலவீனத்தை ஜோஷ் ஹேசில்வுட், கமின்ஸ், பேட்டின்சன், ஸ்டார்க் ஆகியோருக்கு எடுத்துக் காட்டியுள்ளார்.

மேலும் இதே தொடரில் இன்னொரு உலகின் சிறந்த வீரர் ஸ்டீவ் ஸ்மித்தையும் பும்ரா வீழ்த்தியுள்ளதும், விராட் கோலிக்கே ஆட்டம் காட்டியதன் மூலம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களான வார்னர், ஸ்மித், லபுஷேனுக்கும் பும்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதற்குள் பும்ரா காயமடையாமல் இருக்க வேண்டும் என்பதே நம் பிரார்த்தனை. ஏனெனில் அவர் முழு வேகத்துடன் வீசி வருகிறார்.

SCROLL FOR NEXT