ஹிட்மேன் என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் ரோஹித் சர்மாவுக்கு தொடை பின்பகுதியில் காயம் ஏற்பட்டதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்படவில்லை, இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் ரோஹித் சர்மாவை ஏன் தேர்வு செய்யவில்லை என்பதற்கான காரணத்தை பிசிசிஐ வெளிப்படையாகக் கூறவில்லை. கவாஸ்கர் பிசிசிஐ-யின் இத்தகைய போக்கை வெகுவாகக் கண்டித்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் தேர்வு செய்யப்படாவிட்டாலும் மும்பை அணிக்காக விளையாட பயிற்சி செய்யும் வீடியோ வெளியானதையடுத்து ரோஹித் சர்மா வேண்டுமென்றே ஆஸ்திரேலியா தொடரில் தேர்வு செய்யப்படமால் கழற்றி விடப்பட்டாரா என்ற சந்தேகமும் எழுந்தது.
இந்நிலையில் பிசிசிஐ தரப்பில் இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு ஒருவர் தெரிவிக்கும்போது, ரோஹித் காயம் நாம் எதிர்பார்த்தது போல் சாதாரணமானது அல்ல, மோசமானது.
மும்பை அணி வெளியிட்ட வீடியோவில் காட்டப்படும் ரோஹித் சர்மா பயிற்சி என்பது அவரது காயத்தின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக இல்லை.
ரோஹித் சர்மாவுக்கு ஏ கிரேடு 1 காயம் ஏற்பட்டுள்ளது, இது குணமடைய 4 முதல் 6 வாரங்கள் தேவைப்படும். கிரேடு 2 காயமென்றால் 8 வாரங்கள் தேவைப்படும். சாதாரண காயம் என்றால் 10 நாட்களில் சரியாகலாம். ஆனால் ரோஹித் காயம் தீவிரமானது, என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.