விளையாட்டு

நான் சொன்னது லஷ்மணுக்கும் கேட்டு விட்டதோ?- சன் ரைசர்ஸ் குறித்து சேவாக் ருசிகரம்

செய்திப்பிரிவு

நடப்பு ஐபிஎல் தொடரில் விருத்திமான் சஹா தன் முதல் போட்டியை ஆடி அதிலேயே 47 பந்துகளில் 85 ரன்கள் விளாசி அசத்தினார். இதன் மூலம் ஹைதராபாத் அணி டெல்லி அணியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஆட்ட நாயகன் ஆனார் சஹா. அவரது ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் ரசித்ததாக டெண்டுல்கர் பதிவிட, ரவிசாஸ்திரியும் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

ஆனால் சில நாட்களுக்கு முன்பாக சேவாக் தனது பதிவொன்றில் விருத்திமான் சஹாவை ஏன் குறைத்து மதிப்பிட வேண்டும் என்று கேட்டிருந்தார், அவர் கேட்டது லஷ்மணுக்கும் கேட்டு விட்டதோ அதனால் சஹாவைத் தேர்வு செய்தாரோ என்று நகைச்சுவையாக சஹாவைத் தேர்வு செய்ததற்கு தானே காரணம் என்று கூறினார்.

இந்நிலையில் சேவாக் அந்த வீடியோவில் ஒரு மருத்துவர் போல் ஸ்டெதாஸ்கோப்புடன் தோன்றி, “ஹைதரபாத் அணிக்கான டெஸ்ட்களை எடுத்து விட்டோம். பேட்டிங் கவுண்ட் பிரமாதமாக உள்ளது, பவுலிங் கவுண்ட் ஸ்டன்னிங். ரன் ரேட் அட்டகாசம். ஹைதராபாத் உடல் நிலை சரியாக விட்டது. டிஸ்சார்ஜ் செய்யலாம்” என்றார் நகைச்சுவையாக.

என்னுடைய ‘பைதக்’ நிகழ்ச்சியை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றுதான் நினைத்தேன், சிறிது நாட்களுக்கு முன்புதான், ‘அனுபவம் வாய்ந்த, குறைத்து மதிப்பிடப்படும் சஹாவை அணிக்குள் மீண்டும் கொண்டு வரவேண்டாமா?’ என்று கேட்டேன்.

நான் அப்போது கூறியதை ஏதோ ஜோக் அடிக்கிறேன் என்று நீங்கள் நினைத்திருக்கலாம் ஆனால் விவிஎஸ் (லஷ்மண்) என்னுடைய வீடியோவை பார்த்து விட்டார் என்று நினைக்கிறேன். விவிஎஸ் நான் பில் அனுப்புகிறேன் எனக்கு சேர வேண்டியதைச் சேர்த்து விடுங்கள், என்று நகைச்சுவையுடன் ருசிகரமாகப் பேசியுள்ளார்.

SCROLL FOR NEXT