முதல் முறையாக ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் தோனி தலைமை சிஎஸ்கே அணி வெளியேறியதையடுத்தும், தோனியின் வயது 39 என்பதை முன்வைத்தும் அடுத்த ஐபிஎல் தொடரில் யார் கேப்டன் என்ற கேள்வி ஆங்காங்கே விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள், சாதகமான பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகளில் தோனி நல்ல கேப்டன், அவருக்குப் பழக்கமில்லாத இடங்களில் சூழ்நிலைகளில் அவருக்கு கேப்டன்சியில் குழப்பங்களும் தடுமாற்றங்களும் ஏற்படுவதைப் பார்த்து வருகிறோம். இது அவரது பேச்சுகளிலும் எதிரொலிக்கிறது.
உதாரணமாக வெற்றி பெறும்போது வின்னிங் இஸ் இம்பார்டெண்ட் என்பார். தோல்வி அடையும்போது புரோசஸ் என்பார். இப்போதும் புரோசஸ் என்று கூறினார். பிறகு இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று கூறி முன்னாள் வீரர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.
இந்நிலையில் கேப்டன்சியில் அவர் நீடிப்பாரா என்ற கேள்விக்கு சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியதாவது:
''2021 ஐபிஎல் தொடரிலும் தோனி கேப்டனாக இருப்பார் என உறுதியாக நம்புகிறேன். எங்களுக்காக 3 முறை கோப்பையை வென்று தந்துள்ளார்.
அனைத்து முறையும் பிளே ஆஃப் சுற்றுக்கு இட்டுச் சென்றுள்ளார். எந்த அணியும் இந்தச் சாதனையைச் செய்ததில்லை. லீக் சுற்றுடன் திரும்புவது இதுதான் முதல் முறை.
ஒரு மோசமான தொடருக்காக அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று அர்த்தமல்ல. எங்கள் திறமைக்கேற்ப ஆடவில்லை, தோற்ற சில போட்டிகளில் நாங்கள் வென்றிருக்க வேண்டியதுதான்.
கரோனா பயம் காரணமாக ஹர்பஜன், ரெய்னா விலகினர். இதனால் அணியில் பேலன்ஸ் பாதிக்கப்பட்டது’’.
இவ்வாறு சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.