ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக கடைசி 2 போட்டிகளில் சிறப்பாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார் யுவராஜ் சிங். அவரைத் தாறுமாறாக விமர்சிப்பது கூடாது. அவரை மதிக்கவேண்டும் என்று பெங்களூரு கேப்டன் கோலி கூறியுள்ளார்.
நேற்று 9 சிக்சர்களை விளாசினார் யுவ்ராஜ் சிங், டெல்லி பந்து வீச்சு இவரது மட்டை சுழற்றலினால் கதி கலங்கிப் போனது.
இவரது திடீர் எழுச்சி குறித்து விராட் கோலி கூறும்போது, "யுவராஜ் ஆட்டம் அபாரமாக வந்து கொண்டிருக்கிறது. நிறைய பேர் அவர் அவ்வளவுதான் முடிந்து விட்டார் என்று எழுதிச் சென்றனர். இதுபோன்று எந்த ஒரு கிரிக்கெட் வீரர் பற்றியும் நாம் நினைத்துவிடலாகாது ஏனெனில் எந்த வீரர் எப்போது மீண்டும் ஃபார்முக்கு வருவார் என்பதை நாம் அறுதியிட முடியாது.
யுவராஜ் உலகத் தரம் வாய்ந்த வீரர். அவரை மதிக்கவேண்டும். அவர் தனி நபராக 2 உலகக் கோப்பைகளை இந்தியாவுக்கு வென்று தந்துள்ளார். பெங்களூரு அணியின் முக்கியக் கட்டத்தில் அவர் இவ்வாறு மீண்டும் அதிரடி ஆட்டத்திற்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது" என்றார் கோலி.
அவரது சொந்த பேட்டிங் சொதப்பலாக உள்ளது பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த கோலி, "நான் கடந்த வருடமும் கேப்டனாகவே இருந்தேன், 680 ரன்களை அடித்தேன். சில சமயங்களில் நாம் நமக்கு நடப்பதை நினைத்து அதிகம் வருத்தப்படுவதற்கில்லை. ஏனெனில் ஃபார்ம் பற்றி மிகவும் கவலைப்பட்டால் நமக்கு வெறுப்பே மிஞ்சும். ஆகவே ஃபார்முக்குத் திரும்புவது தானாக நடக்கும்" என்றார் அவர்.