விளையாட்டு

என்ன ஆயிற்று பென் ஸ்டோக்ஸுக்கு? 100 பந்துகளுக்கும் மேல் ஆடிய பவர் ஹிட்டரிடமிருந்து ஒரு சிக்ஸ் கூட இல்லை

செய்திப்பிரிவு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் வருகையை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பெரிய அளவில் எதிர்பார்த்தார்.

ரசிகர்களும் உலகக்கோப்பை வென்ற ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் என்று ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ சோபிக்கவில்லை என்பதோடு கடுமையாகத் திணறுகிறார்.

அவரைப்போன்ற ஒரு திறமைசாலி பேட்டிங்கில் திணறுவது ஆச்சரியமாக இருப்பதோடு, ஐயத்தையும் எழுப்புவதாக உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஏதாவது இந்தத் தொடரில் தேற வேண்டுமென்றால் பென் ஸ்டோக்ஸ் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தால்தன உண்டு என்ற நிலையில் நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக 32 பந்துகளில் 2 பவுண்டரிகள் மட்டுமே அடித்து 30 ரன்களை எடுத்து ரஷீத் கான் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார்.

100% ஸ்ட்ரைக் ரேட் கூட வைக்க முடியாத அளவுக்கு ஹைதராபாத் பவுலிங் ஒன்றும் பெரிய பவுலிங் அல்ல.

இதுவரை மொத்தமாக 110 ரன்களை மட்டுமே அடித்திருக்கும் பென் ஸ்டோக்ஸ் மிகப்பெரிய ஹிட்டர் என்பது நன்கு அறியப்பட்ட ஒரு உண்மை.

ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் அவரால் ஒரு சிக்சர் கூட அடிக்க முடியவில்லை என்பது உறுத்தலாக உள்ளது. 100 பந்துகளுக்கும் மேல் அவர் எதிர்கொண்டு விட்டார், ஆனால் பவர் ஹிட்டரிடமிருந்து ஒரு சிக்ஸ் கூட வரவில்லை என்பது புரியாத ஒரு புதிராக உள்ளது.

இது தொடர்பாக ஆகாஷ் சோப்ரா தன் ட்விட்டர் பக்கத்தில், அதிகப் பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸ் கூட அடிக்காத வீரர்கள் பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் இணைந்து விட்டார் என்று பதிவிட்டதோடு இந்தப் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

அதில் அதிகபட்சமாக 2013 தொடரில் மந்தீப் சிங் 223 பந்துகளை சந்தித்து ஒரு சிக்சரையும் அடிக்காமல் முதலிடம் பிடித்துள்ளார். இதில் ஹனுமா விஹாரி, லஷ்மண், புஜாரா, கேன் வில்லியம்சன், குமார் சங்கக்காரா என்று 8 வீரர்கள் வெவ்வேறு ஐபிஎல் தொடர்களில் அதிகபந்துகள் ஆடி ஒரு சிக்சரைக் கூட அடிக்க முடியாமல் போனதை ஆகாஷ் சோப்ரா பட்டியலிட்டுள்ளார்.

இந்தப் பட்டியலை வெளியிட்டு தன்னை கிண்டல் செய்பவருக்கு அவரே தீனியும் ருசிகரமாக வழங்கியுள்ளார், அதில், “நான் இந்தப் பட்டியலில் இல்லை, ஏனெனில் ஒரு சீசனில் 100 பந்துகளை ஆடும் அளவுக்கு கூட நான் ஒரு நல்ல வீரனாக இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT