புதிய பந்தை என்னிடம் தந்து விராட் கோலி பந்துவீசச் சொன்னதுமே எனக்குள் புதிய நம்பிக்கை பிறந்துவிட்டது. நான் சிறப்பாகச் செயல்பட்டதற்கு விராட் கோலி என் மீது வைத்த நம்பிக்கை காரணம் என்று ராயல் சேலஞ்ச் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் சேர்த்தது. 85 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 85 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
கொல்கத்தா அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்த பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 4 ஓவர்கள் வீசிய சிராஜ் 2 மெய்டன்கள், 8 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
26 வயதான முகமது சிராஜ் தனது முதல் ஓவரிலேயே ரன் ஏதும் கொடுக்காமல் திரிபாதி விக்கெட்டையும், அடுத்த பந்தில் நிதிஷ் ராணா விக்கெட்டையும் சாய்த்தார். தனது 2-வது ஓவரில் பாண்டன் விக்கெட்டை வீழ்த்திய சிராஜ் மெய்டன் ஓவராக மாற்றினார். மொத்தம் 4 ஓவர்கள் வீசிய சிராஜ் அதில் 2 மெய்டன் ஓவர்களாக வீசினார். ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு வீரர் 2 மெய்டன் எடுப்பது இதுதான் முதல் முறையாகும்.
மாயஜாலப் பந்துவீச்சை வெளிப்படுத்தி கொல்கத்தா அணியின் சரிவுக்குக் காரணமான முகமது சிராஜுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
“நான் முதலில் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். வழக்கமாக என்னை 10 ஓவர்களுக்கு மேல்தான் பந்துவீச விராட் கோலி அழைப்பார். ஆனால், இந்தப் போட்டியில் 2-வது ஓவரை புதிய பந்தில் என்னைப் பந்துவீச கோலி அழைத்தார்.
நான்தான் ஓப்பனிங் பந்துவீச்சை வீசுவேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அதிலும் விராட் கோலி, 'என்னிடம் வந்து சார், ரெடியாக இருக்கீங்களா நீங்கள்தான் அடுத்து பந்துவீசப் போகிறீர்கள்' என்றவுடன் எனக்குள் புதிய நம்பிக்கை பிறந்துவிட்டது.
முதல் ஓவரில் மோரிஸ் பந்துவீசி, பல பந்துகள் பேட்ஸ்மேனால் விளையாட முடியாமல் பீட்டன் ஆனது. 2-வது ஓவரை என்னிடம் கொடுத்து டிவில்லியர்ஸிடம் கவனமாக இருங்கள் என்று கோலி தெரிவித்தார்.
நான் இயல்பில் ஒரு இன்ஸிவிங் பந்துவீச்சாளர். ஆனால், பயிற்சியின்போது அவுட்ஸ்விங் போடுவதிலும் கூடுதல் கவனம் செலுத்தினேன்.
என்னுடைய பயிற்சியின்போது தேவ்தத் படிக்கல், பர்தீவ் படேல் இருவரும் என் பந்துவீச்சை எதிர்கொண்டனர். அவர்களுக்கு வீசியதுபோல் சரியான லென்த்தில் ராணாவுக்கு வீசிய போது விக்கெட் வீழ்ந்தது. இந்தப் போட்டியில் நான் திட்டமிட்ட இடத்தில் வீச முடிந்ததால், எளிதாக விக்கெட்டுகளையும் வீழ்த்த முடிந்தது."
இவ்வாறு சிராஜ் தெரிவித்தார்.