அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் 2020-ன் 39வது போட்டியில் கொல்கத்தாவை நொறுக்கியது விராட் கோலி தலைமை ஆர்சிபி அணி.
இதில் ஆட்ட நாயகனான வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், கொல்கத்தாவின் திரிபதி, ராணா, பேண்ட்டன் ஆகியோரை சடுதியில் பெவிலியன் அனுப்பியதோடு ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 2 மெய்டனக்லை 4 ஓவர்களில் வீசி 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அரிய சாதனையைப் புரிந்தார்.
கடந்த ஐபிஎல் தொடரில் முக்கிய போட்டிகளில் சிராஜ் சொதப்பியதால் ஆர்சிபி தோல்விகண்டது, இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் அவரது ஃபார்ம் மீட்சி கடந்த தொடரில் இவர் சந்தித்த விமர்சனங்களுக்கு பதிலடியாக அமைந்தது.
ஆட்டம் முடிந்த பிறகு ஆர்சிபி கேப்டன் விராட் கோலியும் சிராஜ்ஜை புகழ்ந்து கூறிய போது, “கடந்த ஐபிஎல் தொடர் சிராஜ்ஜுக்குக் கடினமாக அமைந்தது. ரசிகர்கள் அவரை அளவுக்கு அதிகமாக விமர்சித்தனர்.
இந்த ஆண்டு அவர் கடினமாக உழைத்து வலைப்பயிற்சியில் பிரமாதமாக வீசி வருகிறார். இப்போது அவரிடமிருந்து நமக்கு நல்ல முடிவுகள் கிடைக்கின்றன, ஆனால் அவர் இதற்கான வழிமுறையிலிருந்து விலகக் கூடாது.
புதிய பந்தில் வாஷிங்டன் சுந்தருக்குத்தான் கொடுக்க நினைத்தேன். வாஷிங்டன் மற்றும் மோரிஸை பவுலிங் செய்ய வைப்பதுதான் திட்டம். ஆனால் பிறகு மோரிஸ், சிராஜ் என்று மாற்றினோம், நல்ல திட்டமிட்டு ஆடுகிறோம், எங்களிடம் பிளான் ஏ, பிளான் பி, பிளான் சி மூன்றுமே உள்ளது.
ஏலத்திலும் சில விஷயங்களைச் செய்தோம் அது இப்போது கைகொடுக்கிறது. மோரிஸ் பொறுப்பையே வாழ்கிறார். தலைமைப் பங்கு வகிக்கவும் அவர் தயங்கவில்லை. அவரது ஆற்றல் அபாரம், பேட்டிங்கிலும் ஆடக்கூடியவர்.” என்றார் விராட் கோலி.