தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் பரோடா அணியின் வெற்றிக்கு இன்னும் 118 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால் அந்த அணி வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் தமிழகம் தனது முதல் இன்னிங்ஸில் 57.4 ஓவர்களில் 125 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து பேட் செய்த பரோடா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்திருந்தது.
2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பரோடா அணியில் கேப்டன் வாஹ்மோட் 21 ரன்களிலும், தேவ் தார் 40 ரன்களிலும் ஆட்டமிழக்க, அந்த அணி ஆட்டம் கண்டது. பின் னர் வந்தவர்களில் அதிகபட்சமாக யூசுப் பதான் 41 ரன்கள் எடுத்தார். எஞ்சிய வீரர்கள் வேகமாக வெளியேற, 49.2 ஓவர்களில் 159 ரன்களுக்கு சுருண்டது பரோடா.
தமிழகம் தரப்பில் ராஹில் ஷா, சந்திரசேகர் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இதையடுத்து 2-வது இன்னிங்ஸை ஆடிய தமிழக அணியின் கேப்டன் அபினவ் முகுந்த் மீண்டும் டக்அவுட்டானார். பரத் சங்கர் 15 ரன்களில் ஆட்டமிழக்க, பாபா அபராஜித் 39 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பின்னர் வந்தவர்களில் தினேஷ் கார்த்திக் 18, இந்திரஜித் 35 ரன்கள் எடுத்தனர். எஞ்சிய வீரர்கள் வேகமாக வெளியேற, 59.4 ஓவர்களில் 155 ரன்களுக்கு சுருண்டது தமிழகம்.
பரோடா தரப்பில் பார்கவ் பட் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதையடுத்து 122 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய பரோடா 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 118 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
பரோடா அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது.