டாடீஸ் ஆர்மி என்ற கேலிக்கு இணங்க வயதானவர்களை, ஓய்வு பெற்றவர்களை அணியில் வைத்துக் கொண்டு எந்த ஒரு சவாலும் இல்லாமல் சரணாகதி அடைந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு ஏறக்குறைய தகுதி பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது.
நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகளில் படுதோல்வி அடைந்ததையடுத்து தோனி பேட்டியளிக்கையில் இளம் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், தமிழக வீரர் ஜெகதீசன் உள்ளிட்டோருக்கு ஏன் வாய்ப்பளிக்கவில்லை என்று கேட்டபோது, ‘இளம் வீரர்களிடம் பெரிதாக ஸ்பார்க்’ ஒன்றும் தெரியவில்லை என்று கூறினார்.
இது கடும் விமர்சனங்களையும் ரசிகர்களின் கோபாவேசத்தையும் கிளறி விட்டுள்ளது. ரசிகர்களில் பலரே ‘கேதார் ஜாதவ்விடம் என்ன ஸ்பார்க்கைக் கண்டார் எனவும் தோனியிடம் ஸ்பார்க் உள்ளதா என்றும் வாங்கித் தள்ளி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழில் ஐபிஎல் வர்ணனை மேற்கொண்டு வரும் முன்னாள் அதிரடி வீரரும் இந்திய முன்னாள் கேப்டனுமான தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தோனியை கடுமையாக விமர்சித்தார்.
கேதார் ஜாதவ்வை தொடர்ந்து அணியில் எடுப்பதன் மூலம் அவரிடம் என்ன ‘ஸ்பார்க்கை’ கண்டார் தோனி என்று கேள்வி எழுப்பினார் ஸ்ரீகாந்த்.
“தோனி எப்போதும் புரோசஸ் புரோசஸ் என்று கூறுகிறார், நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. தொடர்ந்து அவர் இந்த வழிமுறை, புரோசஸ் என்பதெல்லாம் சும்மா அர்த்தமற்ற பேச்சு. புரோசஸ் புரோசஸ் என்று பேசிக்கொண்டே இருக்கிறார், ஆனால் அணித்தேர்வு என்ற புரோசஸில் கோட்டை விடுகிறாரே” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழுக்கு ஸ்ரீகாந்த் கூறியதை ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ மேற்கோள் காட்டியுள்ளது.
நெட்டிசன்களும் இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை என்ற தோனியின் கருத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.