விளையாட்டு

இரண்டு பரபரப்பான கிங்ஸ் லெவன் வெற்றிகள்: இந்த ஐபிஎல் தொடரில் அலையின் திசை மாறும்: கே.எல்.ராகுல் உறுதி

செய்திப்பிரிவு

துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020-ன் 36வது போட்டி டி20 வரலாற்றில் இடம்பெற்றது. ஒரே மேட்சில் 2 சூப்பர் ஓவர்கள், இதில் கே.எல்.ராகுலின் அபார பேட்டிங்குடன், விக்கெட் கீப்பிங்கில் செய்த அசத்தல் ரன் அவுட் மற்றும் மயங்க் அகர்வாலின் அட்டகாசமான பவுண்டரி பீல்டிங் இரண்டும் கிங்ஸ் லெவன் வெற்றியை உறுதி செய்தது.

பொதுவாக சூப்பர் ஒவர்களை வெற்றியுடன் முடிக்கும் மும்பை இந்த முறை கிங்ஸ் லெவனின் பிரில்லியன்ஸில் தோல்வி தழுவியது.

முதல் சூப்பர் ஓவரில் பும்ராவின் அசத்தல் பந்து வீச்சு, அடுத்ததாக ஷமியின் அசத்தலான யார்க்கர் பவுலிங். உண்மையில் இந்தப் போட்டி விறுவிறுப்பின் உச்சத்துக்கு சென்று கிங்ஸ் லெவன் தற்போது இரண்டு விறுவிறுப்பான, நெருக்கமான போட்டிகளில் வெற்றி பெற்றதையடுத்து கிங்ஸ் லெவன் அணி இந்த ஐபிஎல் தொடரில் திருப்பு முனை ஏற்படுத்தி ஐபிஎல் அலையின் திசையை மாற்றுவோம் என்று கூறியுள்ளார்.

ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட கேப்டன் ராகுல் நேற்று ஆட்டம் முடிந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்குக் கூறியதாவது:

ஆம் நெருக்கமான போட்டிகள், ஆனால் இதையே வழக்கமாக்க மாட்டோம். கடைசியில் 2 புள்ளிகளை வென்றோம் என்பதுதான் முக்கியம். நாம் திட்டம் போட்ட படி எதுவும் நடக்காது, எனவே நாம் சமச்சீராக இருப்பது கடினம். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது, காரணம் வீரர்கள் கடினமாக உழைக்கின்றனர்.

நாங்கள் தோற்ற போட்டியில் கூட நன்றாகவே ஆடினோம், ஆனால் வெல்ல முடியவில்லை.20 ஓவர் விக்கெட் கீப்பிங்குக்குப் பிறகு இறங்க வேண்டியுள்ளது, பவர் ப்ளே முக்கியமானது. கிறிஸ் கெய்ல், பூரனை நான் நன்கு அறிவேன், ஸ்பின்னர்களை அடித்து ஆடுவார்கள் என்று தெரியும். கிறிஸ் கெய்ல் இருப்பது என் வேலையை சுலபமாக்குகிறது.

சூப்பர் ஓவர்களுக்காக நாம் தயாராக திட்டமிட முடியாது. பவுலர்களை நம்ப வேண்டியதுதான். அவர்கள் உள்ளுணர்வு என்ன கூறுகிறதோ அதைத்தான் வீச முடியும். ஷமி தெளிவாக இருந்தார், 6 பந்துகளும் யார்க்கர் என்பதில் நிச்சயமாக இருந்தார். ஒவ்வொரு போட்டியிலும் அவரது ஆட்டம் மேம்பட்டுக் கொண்டே வருகிறது. மூத்த வீரர்கள் போட்டியை வென்று கொடுப்பது அவசியம்.

இரண்டு பரபரப்பான நெருக்கமான வெற்றிகளுக்குப் பிறகு அலையின் திசை மாறும் என்று கருதுகிறேன். தொடரில் திருப்பு முனை ஏற்படுத்துவோம். ஆனாலும் ஒரு சமயத்தில் ஒரு போட்டி என்ற விதத்தில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். தோல்விகளுக்குப் பிறகு இந்த வெற்றிகள் இனிமையாக உள்ளன. இங்கிருந்து ஒவ்வொரு போட்டியையும் நாங்கள் வெற்றி பெற வேண்டும், அதற்காக வெற்றிக்கு இட்டுச் செல்லும் அடிப்படைகளை மறக்கப் போவதில்லை, என்றார் கே.எல்.ராகுல்.

SCROLL FOR NEXT