சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ். தோனி : கோப்புப்படம் 
விளையாட்டு

கடைசி ஓவரில் பிராவோ பந்துவீசாமல், ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கியது ஏன் ? - தோல்வி குறித்து தோனி விளக்கம்

பிடிஐ

டெல்லி கேப்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கடைசி ஓவரை பிராவோவிடம் வீசக் கொடுக்காமல், ஜடேஜா பந்துவீச வாய்ப்புக் கொடுத்தது குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி விளக்கம் அளித்துள்ளார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி தோற்கடித்தது.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. 180 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி ஒரு பந்து மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து185 ரன்கள் சேர்த்து 5 விக்ெகட் வித்தியாசத்தில் வென்றது.

கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவை. வழக்கமாக டெத் ஓவரை பிராவோதான் வீசுவார். ஆனால், திடீரென ஜடேஜா வீசியது வியப்பாக இருந்தது. அனுபவமான ஜடேஜாவின் ஓவரில் அக்ஸர் படேல், 3 சிக்ஸர்களை விளாசி வெற்றியுடன் ஆட்டத்தை முடித்தார்.

பிராவோவுக்கு இன்னும் ஒரு ஓவர் மிச்சம் இருந்த நிலையில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுத்து தோனி பந்துவீசச் செய்தது சலசலப்பை ஏற்படுத்தியது, சமூக ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டது.

இந்த முடிவு குறித்து தோல்விக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் தோனி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

கடைசி ஓவரை பிராவோவுக்குதான் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், பிராவோ பந்துவீசும் அளவுக்கு உடல்தகுதியில்லாமல் இருந்தார். அவர் உடல்தகுதியில்லாமல் ஓய்வு அறைக்குச் சென்றவர் திரும்பி வரவில்லை.இதனால் எனக்கு கரன் சர்மா, ஜடேஜா இருவரில் ஒருவருக்குதான் ஓவரை கொடுக்க வேண்டிய வாய்ப்பு இருந்தது.

இதில் ஜடேஜா அனுபவம் மிகுந்தவர் என்பதால், அவரைத் தேர்வு செய்து அவரை கடைசி ஓவரை வீசச் செய்தேன்.

எங்களுக்கு ஷிகர் தவண் விக்கெட்டை வீழ்த்துவது முக்கியமாக இருந்தது. ஆனால், பல கேட்சுகளை தவறவிட்டோம். அவர் தொடர்ந்து பேட் செய்ததால், ரன்ரேட் உயர்ந்து வந்தது. முதல் பாதியில் இருந்ததைவிட 2-வது பாதியில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைத்தது. இருப்பினும் அனைத்துப் பெருமைகளும் ஷிகர் தவணையே சாரும்.

மைதானத்தில் பெரிதாக பனிப்பொழிவு இல்லை, இருப்பினும் ஆடுகளம் காயந்திருந்தாலும், பேட்டிங்கிற்கு 2-வதுபாதியில் நன்கு ஒத்துழைத்தது. இதுதான் பெரிய வித்தியாசம். இன்னும் நாங்கள் 10 ரன்கள் கூடுதலாகச் சேர்த்திருக்க வேண்டும்.

19-வது ஓவரை சாம்கரன் சிறப்பாக வீசினார். வைடு, யார்கர் சிறப்பாக வீசி ரன்களை கட்டுப்படுத்தினார். பொதுவாக கடைசி ஓவரில் நம்பிக்கையற்று பந்துவீசும் சாம், இந்த முறை சிறப்பாக பந்துவீசினார்”
இவ்வாறு தோனி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT