இந்திய கேப்டன் மற்றும் ஆர்சிபி கேப்டன் விராட் கோலியையும் அதிரடி மன்னன் ஏ.பி.டிவில்லியர்ஸையும் வரும் ஐபிஎல் தொடர்களிலிருந்து தடை செய்ய வேண்டும் என்று கே.எல். ராகுல் வைத்த திடீர் கோரிக்கைக்குக் காரணம் என்ன என்பது அவருக்கும் கோலிக்கும் நடந்த உரையாடலில் தெரியவந்துள்ளது.
ஆர்சிபி அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதிய போட்டிக்கு முன்னதாக இருவரும் சமூக ஊடகத்தில் மேற்கொண்ட ஜாலி உரையாடலில், கோலி, ராகுலிடம் டி20 கிரிக்கெட்டில் ஒரு மாற்றம் வேண்டுமென்றால் அது என்ன மாற்றமாக இருக்க வேண்டும் என்று நீ நினைக்கிறாய் என்று கேட்க, அதற்கு ராகுல், “முதலில் உங்களையும் (விராட் கோலியையும்) ஏ.பி.டிவில்லியர்ஸையும் ஐபிஎல் தொடர்களுக்கு தடை செய்ய வேண்டும். நீங்களெல்லாம் 5,000 ரன்கள் எடுத்து விட்டீர்கள், போதும். மற்றவர்களை ஆட விடுங்கள் என்று கூறுவேன்” என்றார் ஜாலியாக.
மேலும் 100மீ தாண்டி செல்லும் சிக்ஸர்களுக்கு கூடுதலாக ரன்கள் வேண்டும் என்றார் ராகுல்.
கோலி உடனே ஜாலியாக, ‘நான் விளையாடாமல் இருப்பது பற்றிய உன் விருபத்துக்கு நான் ஆம் என்று கூறினால் ஓய்வறையில் பவுலர்கள் என்னை முறைப்பார்கள், காரணம் என்ன தெரியுமா? ஏனெனில் நோ-பால், வைடுகளை, இடுப்புக்கு மேல் வரும் புல்டாஸ்களை நான் ரிவியூ செய்பவனாக இருப்பேன்’ என்றார்.