ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020-ன் 31-வது போட்டியில் ஆர்சிபி அணியின் 172 ரன்கள் வெற்றி இலக்கை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஊதித்தள்ளியது.
ராகுல் (61), அகர்வால் (45) ஆகியோர் 8 ஓவர்களில் 78 ரன்கள் என்ற அபாரத் தொடக்கம் கொடுக்க கெய்ல் இறங்கினார், விட்ட இடத்திலிருந்து தொடர்வது போல் 45 பந்துகளில் 1 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 53 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார். 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் இந்த ஐபிஎல் தொடரின் 2வது வெற்றியைப் பெற்றது.
போட்டி முடிந்தவுடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு கிங்ஸ் லெவன் கேப்டன் ராகுல் கூறும்போது, “என்னிடம் வார்த்தைகள் இல்லை. நம்பிக்கைக் கொடுக்கும் வெற்றியை பெற வேண்டும் என்று நினைத்தோம். அட்டவணையில் கீழ் நிலையில் இருக்கும் அணியல்ல நாங்கள், அதைவிட சிறந்த அணிதான்.
தோல்விகளினால் ஏமாற்றமடைவதும், வெறுப்படைவதும் இயல்புதான், நான் மட்டுமல்ல, அணி மொத்தமுமே வெறுப்படைந்தோம். எங்கள் திறமைக்கேற்ப ஆடவில்லை. இது கிரிக்கெட்டிலும் சகஜம், ஐபிஎல்-ல் மிக சகஜம்.
ஒரு கேப்டனாக என்னைப் பற்றி மட்டும் யோசிக்காமல் மொத்த அணிக்காக யோசிக்க வேண்டும். இது ஒரு சவால், அதனால்தான் என்னுடைய ஆட்டம் பற்றி எனக்கு ஒன்றும் பெரிதாகப் படவில்லை.
கிறிஸ் கெய்ல் உடல்நிலை சரியில்லை, ஆனால் அவர் ஆடியே ஆக வேண்டும், ரன்களுக்கான பசி அவரிடம் இருந்தது. அவர் நல்ல பயிற்சியில் இருந்தார். அவரைப்போன்ற ஒருவரை ஆடாமல் வைத்திருப்பது கடினமான முடிவு.
அவரை ஆட வைத்ததற்கான பெருமையை நான் பெற முடியாது, சிங்கத்தைப் பசியுடன் வைத்திருப்பதும் முக்கியம் அல்லவா. எந்த நிலையில் அவர் இறங்கினாலும் அவர் அவர்தான். 3ம் நிலையில் இறக்கியது என்று பயனளித்தது. இதே நிலையில் அவர் தொடர்வார் என்று நம்புகிறோம்.