இலங்கையில் வெற்றிகரமாகத் தன் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டுத் திரும்பியிருக்கும் இந்திய அணி அடுத்த மாதத்திலி ருந்து தொடங்கவிருக்கும் நீண்ட பயணத்துக்காகக் காத்துக்கொண் டிருக்கிறது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரே லியா முதலான அணிகளின் சவாலை எதிர்கொள்ளவிருக்கும் இந்திய அணி, அதற்கான மன வலிமையை இந்தத் தொடரிலிருந்து பெற்றிருக்கிறது என்று சொல்லலாம்.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்னும் கணக்கில் இந்தியா வென்றிருக்கிறது. 3-0 என்றுகூட இந்த முடிவு இருந்திருக்கலாம் என்னும் அளவுக்குத் தோற்ற போட்டியிலும் சிறப்பாகவே ஆடியது. ஒரே ஒரு கட்டத்தில் ஆடிய மோசமான ஆட்டத்தால் அந்தப் போட்டியில் தோல்வியடைந்தாலும் தொட ரின் பெரும்பாலான கட்டங்களில் இந்திய அணியின் ஆதிக்கமே மேலோங் கியிருந்தது.
எதிரணியின் கை ஓங்கிய போதும் பதற்றத்துக்குள்ளாகாமல் தொடர்ந்து தீவிரம் காட்டி, ஆட்டத் தைத் தன் பக்கம் திருப்பிக்கொள்ளும் கலை இந்த அணிக்குக் கைவந்துள்ளது. பின்னடைவு ஏற்படும் தருணங்களில் ஊக்கத்தை இழந்து பின்தங்கும் வழக்கத்தைக் கொண்ட இந்திய அணி இந்த முறை வீரியத்துடன் போராடியது. ஆட்டம் முடியும்வரை ஆட்டம் நம் கையை விட்டுப் போனதாக நினைக்கவே கூடாது என்பதைச் செயலில் காட்டியது.
யாருக்கும் தனிப் பெருமை இல்லை
இந்த வெற்றி அணியின் வெற்றி. எந்த ஒரு தனிப்பட்ட நபரின் ஆட்டத்தி னாலும் கிடைத்துவிடவில்லை. கிட்டத் தட்ட அணி முழுவதும் இதற்குப் பங்களித் திருக்கிறது. விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, ஷிகர் தவன், கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மா, முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, அஸ்வின், இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா, ஸ்டூவர்ட் பின்னி, விருத்திமான் சாஹா என ஒவ்வொருவரும் வெவ்வேறு சமயத்தில் கை கொடுத்து அணியைத் தூக்கி நிறுத்தினார்கள்.
தொடக்க நிலையில் சிறப்பாக ஆடிவரும் முரளி விஜயால் முதல் டெஸ்டில் காயம் காரணமாக ஆட முடியவில்லை. அந்தப் போட்டியில் தவனும் ராகுலும் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். தவன் சதம் அடித்தார். அடுத்த போட்டியில் தவன் ஆடவில்லை. ராகுலும் விஜயும் தொடங்கினார்கள். ராகுல் முதல் இன்னிங் ஸில் சதம் அடித்தார். விஜய் இரண்டாவது இன்னிங்ஸில் 82 ரன்கள் அடித்தார். அடுத்த போட்டியில் விஜய் விலகியதால், ராகுலுடன் ஆட்டத்தைத் தொடங்கிய புஜாரா சதம் அடித்தார்.
இடை நிலையில் கோலி, அஜிங்க்ய ரஹானே ஆகியோர் ஆளுக்கொரு சதம் அடித்தார்கள். முதல் போட்டியில் சொதப்பிய ரோஹித் அடுத்த போட்டி களில் சுதாரித்துக்கொண்டார். முக்கிய மான தருணங்களில் களத்தில் அசராமல் நின்றார். இரண்டு அரை சதங்கள் அடித்து வெற்றிக்கு உதவினார். விருத்திமான் சாஹா, நமன் ஓஜா, ஸ்டூவர்ட் பின்னி ஆகியோருடன் அஸ் வின், மிஸ்ரா ஆகியோரும் மட்டையால் பங்களிப்பு செய்தார்கள். சாஹாவால் ஆட முடியாதபோது கீப்பிங் பணியை ஏற்றுச் சிறப்பாகச் செயல்பட்டார் ராகுல்.
பந்து வீச்சில் இஷாந்த் சர்மா, அஸ்வின், மிஸ்ரா ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டார்கள். எதிரணியின் அனைத்து விக்கெட்களையும் தொடர்ந்து ஆறு முறை வீழ்த்தியது இந்தியப் பந்து வீச்சாளர் களின் தாக்குதல் திறனைக் காட்டுகிறது. தடுப்பாளர்கள் பிடித்த அபாரமான கேட்சு களும் சேர்ந்து எதிரணியினரை முடக்கின.
தலைமையின் பங்கு
கேப்டன் என்ற முறையில் கோலி சில வித்தியாசங்களைக் காட்டியிருக்கிறார். எதிரணி மட்டையாளர் ஆதிக்கம் செலுத்தி ஆடும்போது தற்காப்பு வியூகத்துக்குள் புகுந்துகொள்ளாமல் இருந்தது முக்கிய மானது. ரன்னைத் தடுக்கும் நோக்கில் டீப் பாயிண்டில் தடுப்பாளர் வேண்டும் என்று மிஸ்ரா கேட்டபோது, “பந்தை மட்டையாளருக்கு நெருக்கமாக பிட்ச் செய்தால் அங்கே அடிக்கவே முடியாதே?” என்று பதில் சொன்னார் கோலி.
கோலியின் வியூகங்களில் பிரச்சினை இல்லை என்று சொல்ல முடியாது. முதல் டெஸ்டில் ஐந்து வீச்சாளர்கள் இருந்த போது யாரையும் தொடர்ந்து அதிக ஓவர்கள் போட அனுமதிக்கவில்லை. வீச்சாளர் களின் தெம்பையும் புத்துணர்வையும் தக்கவைக்க இது உதவும் என்றாலும் சில சமயங்களில் ஒருவரின் தொடர் வீச்சுக்குப் பலன் இருக்கும். உடனுக்குடன் வீச்சாளரை மாற்றினால் மட்டையாளருக்கு நெருக்கடி கொடுக்கும் வாய்ப்பு குறைந்துவிடும். இரண்டாவது, மூன்றாவது போட்டிகளில் இந்த அணுகுமுறையை கோலி ஓரளவு மாற்றிக்கொண்டார்.
கோலி ஆவேசமான அணுகுமுறை பற்றி வெளிப்படையாகவே பேசிவரு கிறார். அவரது அணி அந்த ஆவேசத்தைப் பிரதிபலிக்கிறது.வெல்ல வேண்டும் என்னும் முனைப்பும் துடிப்பும் ஒவ்வொருவரிடமும் தெரிகிறது. அற்புதமாகப் பிடிக்கப்பட்ட சில கேட்சுகள் அணியினரின் ஈடுபாட்டையும் வெல்லும் துடிப்பையும் காட்டுகின்றன. எந்த நிலையிலும் போட்டி கைநழுவிவிட்டதாக முடிவுக்கு வராமல் இருப்பது அவர்கள் உடல் மொழியில் தெரிகிறது. தனிப்பட்ட திறமைகளைக் காட்டிலும் இந்தக் குணங்கள் முக்கியமானவை.
அசராத போர்க்குணம்
அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்த போது முதல் போட்டியில் சன்டிமல் விடாமல் போராடினார். நடுவர்களின் தவறான தீர்ப்புகளும் அவருக்கு ஒத் துழைக்க அவர் அணியைப் பெரும் சரிவிலிருந்து மீட்டார். அதேபோன்ற காரி யத்தை மூன்றாவது டெஸ்டில் மேத்யூஸ் செய்தார். சன்டிமலும் திரிமானியும் வலுவான கூட்டணி அமைத்து அணியை மீட்டபோது இந்தியப் பந்து வீச்சாளர்கள் சோர்வடைந்தார்கள். ஆனால் மேத்யூஸும் பெரெராவும் கூட்டணியை வலுவாகக் கட்டமைத்தபோது இந்திய வீச்சாளர்கள் அசரவில்லை. விக்கெட் வீழ்த்திவிட முடியும் என்னும் நம்பிக்கையோடும் தீவிரத் தோடும் ஒவ்வொரு ஓவரையும் வீசி னார்கள். ஒவ்வொருவரிடத்திலும் வெல்லும் ஆவேசம் தெரிந்தது. வெற்றி வசப்பட்டது.
மட்டையில் சில விரிசல்கள்
இந்திய மட்டையாளர்கள் அச்சமற்று ஆடினார்கள். ஆனால் அவர்கள் சுழல் பந்தை ஆடுவதில் அவர்களுக்குள்ள பலவீனமும் அனுபவப் போதாமையும் பல சமயங்களில் அம்பலமாயின. முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் முன்னணி மட்டையாளர்கள் ஆட்டமிழந்த விதத்தில் இது பளிச்சென்று தெரிந்தது.
குறிப்பாக ஷர்மா சுழல் பந்துக்கு எதிராகக் கால்களை நகர்த்தும் விதம் மிகவும் தடுமாற்றம் கொண்டதாக இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் இவர்களிடம் முன்னேற்றம் காணப்பட்டாலும் சுழல் பந்தை உறுதியோடு எதிர்த்து ஆடும் தன்னம்பிக்கை காணப்படவில்லை. அதுபோலவே ஸ்விங் ஆகும் பந்துகளில் எதை விடுவது எதை ஆடுவது என்பதிலும் மட்டையாளர்களுக்குத் தெளிவு இல்லை.
நீண்ட இன்னிங்ஸ் ஆடுவதற்கான முனைப்பை யாருமே காட்ட வில்லை. பல சமயங்களில் விக்கெட்கள் அடுத்தடுத்து விழுந்துகொண்டிருந்ததில் 50, 60 ரன் அடித்தாலே பெரிய விஷயம் என்ற நிலை இருந்ததால் இந்த விஷயம் பெரிதாக உணரப்படவில்லை. ஆனால் டெஸ்ட் பந்தயங்களில் நீண்ட இன்னிங்ஸ் ஆடுவது, கூட்டணிகளைக் கட்டமைப்பது ஆகியவை மிகவும் முக்கியம். இந்த இரண்டு அணுகுமுறைகளும் அதற்கான திறமையும் எதிரணி வீச்சாளர்களை நோக அடிப்பவை.
2001-ல் கொல்கத்தாவில் திராவிடும் லட்சுமணனும் அன்றைய சூழ லில் உலகின் மிகச் சிறந்த பந்து வீச்சைக் கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு நாள் முழுவதும் ‘தண்ணி’ காட்டினார்கள். அதன் மூலமாகத்தான் போட்டி திசை திரும்பியது, வரலாறு மாறியது. அத்தகைய இன்னிங்ஸைக் கட்டி எழுப்புவதற்கான தாகமும் திறமையும் தனக்கு இருப்பதாக இன்றைய அதிரடி யுகத்து மட்டையாளர் யாரும் (விஜயைத் தவிர) இதுவரை நிரூபிக்கவில்லை. மேலும் சவாலான எதிரணிகளைச் சந்திக்கும்போது இது மிக முக்கியமான அம்சமாக இருக்கும்.
அடுத்து தென்னாப்பிரிக்க அணி இந்தி யாவுக்கு வரவிருக்கிறது. ஆஸ்திரேலி யாவும் இங்கிலாந்தும் இந்தியாவில் மண்ணைக் கவ்வியப்போதிலும் தென்னாப் பிரிக்கா இங்கே வென்றிருக்கிறது. எல்லாக் களங்களிலும் ஆடுவதற்கேற்ற அணி அது. 20 ஓவர் போட்டிகள், ஒரு நாள் போட்டிகள், டெஸ்ட் போட்டி கள் என்று முழுமையான சவால் காத்திருக்கிறது. சோதனைகளுக்கும் பரிசோதனைகளுக்கும் பஞ்சம் இருக் காது. இலங்கை தொடரில் கிடைத்த பாடங்களை மனதில் கொண்டால் வெற்றி முகம் மேலும் ஜொலிக்கும்.