துபாயில் நேற்று கிட்டத்தட்ட சேப்பாக்கம் போல் பிட்ச் அமைந்தது, இதனையடுத்து பலவீனமான சன் ரைசர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது.
பிட்ச் பற்றி தோனியே குறிப்பிடும்போது, “பிட்சில் பந்துகள் வேகமாகவும், மெதுவாகவும் இரண்டு விதமாகவும் வந்ததன. சில பந்துகள் ஸ்விங் ஆகின, சிலது ஆகவில்லை. சில பந்துகள் கூடுதலாக எழும்பின, சில பந்துகள் எழும்பவில்லை.” என்று கூறியதோடு, இத்தகைய பிட்ச்கள் தான் எங்களுக்கு சாதகமாக உள்ளன என்றும் கூறினார்.
சேப்பாக்கத்தில் அவரது திட்டம் மிகவும் எளிமையானது, ஸ்பின்னர்களை வைத்து எதிரணியை முடக்குவது, பந்து பேட்டுக்கு வந்தாலதானே? எனவே சென்னை அவருக்கு சாதகமானது போல் நேற்று துபாய் பிட்ச் சாதகமாக அமைந்ததாக தோனியே ஒப்புக் கொண்டார்.
ஆட்டம் முடிந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு தோனி கூறியதாவது:
முக்கியமானது என்னவெனில் 2 புள்ளிகள் அவ்வளவுதான். டி20 கிரிக்கெட் நமக்குக் கற்றுக் கொடுப்பதெல்லாம் நமக்கு ஏற்ப சில ஆட்டங்கள் செல்லாது, வெற்றி நம் பக்கம் இருக்காது என்பதையே.
இன்று நன்றாக ஆடினோம், பேட்டிங்கில் தீவிரம் காட்டினோம். இந்த ஒரு ஆட்டம்தான் துல்லியத்துக்கு நெருக்கமாக அமைந்த போட்டியாகும். ஆனாலும் ஒன்றிரண்டு ஓவர்கள் நாங்கள் இன்னும் கொஞ்சம் விழிப்புடன் இருந்திருக்கலாம். இது எடுக்கக் கூடிய சம வாய்ப்புள்ள ஸ்கோர்தான். நான் எப்போதும் முதல் 6 ஓவர்களை வைத்தே ஸ்கோரை கணிப்பேன்.
வேகப்பந்து வீச்சாளர்களை நம்பியே நிறைய விஷயங்கள் உள்ளன, நான் அவர்களை தைரியமாக வீசச் சொன்னேன். முயற்சி செய்து ஸ்விங் செய்ய வேண்டாம், பிட்ச் 2 விதமாக நடந்து கொண்டது. திட்டங்களை செயல்படுத்த வேண்டும், அதைத்தான் செய்தனர்.
ஆம்! பெரிய அளவில் இத்தகைய பிட்ச்கள் உதவுகின்றன. சாம் கரண் எங்களுக்கு ஒரு முழுநிறைவான வீரர். ஸ்விங் பவுலிங் ஆல்ரவுண்டர் நமக்குத் தேவை. அவர் பந்துகளை நன்றாக அடிக்கிறார், அதனால் அவர் பேட்டிங்கில் முன்னால் இறங்கக் கூடியவர்தான் என்று தீர்மானித்தோம்.ஸ்பின்னர்களையும் நன்றாக ஆடுவார்.
அவர் நமக்கு அந்த 15 முதல் 45 ரன்கள் வரையிலான உத்வேகத்தை அளிப்பார். பந்து வீச்சில் போகப்போக அவர் கடைசி ஓவர்களை திறம்பட வீசப் பழகுவார் என்று கருதுகிறேன்.
இன்னும் என்ன மேம்பாடு தேவை என்பதில் கவனம் செலுத்துகிறோம். போட்டியை வென்று விட்டோம் என்பதால் தவறுகளை மிதியடிக்குக் கீழ் தள்ளக் கூடாது.
இவ்வாறு கூறினார் தோனி.
-பிடிஐ தகவல்களுடன்