ஃபுட் பாய்சனிங்கில் பாதிக்கப்பட்டிருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அதிரடி மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல் குணமடைந்தார், வியாழனன்று ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக ஆடவிருக்கிறார்.
இந்த ஐபிஎல் தொடரில் ஏன் கெய்லை இறக்கவில்லை என்று அனில் கும்ப்ளே மீதும் கே.எல்.ராகுல் மீதும் நெட்டிசன்கள், ரசிகர்கள் பாய்ந்து கொண்டிருந்தனர். அப்போதுதான் கெய்லுக்கு உணவு எடுத்துக் கொண்டதில் சிக்கலாகி வயிற்றுக் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது.
இதனால் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக வருவார் என்று எதிர்பார்த்து ஆடவில்லை, கேகேஆர் அணிக்கு எதிராக ஆடுவார் என்று எதிர்பார்த்து ரசிகர்களுக்கு ஏமாற்றமே எஞ்சியது.
கெய்ல் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் வலைப்பயிற்சியில் கெய்ல் ஈடுபட்ட போட்டோவை கிங்ஸ் லெவன் பஞ்சாப் திங்களன்று வெளியிட்டது.
”அவர் உடல் நிலை தேறி விட்டது, ஆர்சிபிக்கு எதிராக ஆடுவார்’ என்று அணி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆர்சிபிக்கு எதிராக சிறிய மைதானமான ஷார்ஜாவில் கிங்ஸ் லெவன் விளையாடுகிறது. கெய்லின் பவருக்கு அந்த மைதானம் பத்துமா என்று தெரியவில்லை. நேற்று டிவில்லியர்ஸ் அடித்த ஷாட்கள் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்தது போல் கெய்லுக்காக புதிய பந்துகளைத் தயாராக வைத்திருப்பது நல்லது என்று தெரிகிறது.
7 போட்டிகளில் கிங்ஸ் லெவன் 6-ல் தோற்றுள்ளது. எனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு அந்த அணியை இட்டுச் செல்ல கெய்ல் போன்ற பவர் ஹவுஸ் தேவைதான்.
ஆனால் 41 வயது கிறிஸ் கெய்ல், இளம் வீச்சாளர்களின் வேகத்தையும் ஸ்பின்னர்களின் சாமர்த்திய பவுலிங்கையும் தாங்குவாரா அல்லது இந்த ஐபிஎல் கேப்டன்களின் புதியன புகுத்தும் கேப்டன்சியை அவர் முறியடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
(-பிடிஐ தகவல்களுடன்)