கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று தனிநபரகா ஆர்சிபி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றர் ஏ.பி.டிவில்லியர்ஸ் என்றால் அது மிகையாகாது.
விராட் கோலி, ஏரோன் பிஞ்ச் போன்றவர்களே பந்தை ஷார்ஜா பிட்சில் அடிக்க திணறியபோது வந்து இறங்கி கொஞ்சம் நிதானித்து அதன் பிறகு வலுவான கொல்கத்தா பவுலிங்கையும் மைதானம் நெடுக சிதறடித்து 360 டிகிரி சுழன்று சுழன்று விளாசிய டிவில்லியர்ஸ் மட்டும் 33 பந்துகளில் 73 ரன்கள் விளாசியதில் ஸ்கோர் 194/2 என்று உயர்ந்தது.
தொடர்ந்து ஆடிய கொல்கத்தா 112 ரன்களுக்கு முடிந்து மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. இந்த 82 ரன்கள் வித்தியாச வெற்றி ஆர்சிபியின் நிகர ரன் விகிதத்துக்கு பெரிய வலு சேர்த்துள்ளது.
இந்நிலையில் ஆட்ட நாயகன் டிவில்லியர்ஸ் கூறியதாவது:
என் ஆட்டம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பங்களிப்பு செய்ததில் மகிழ்ச்சி. கடந்த போட்டியில் டக் அவுட் ஆனதால் வெறுப்படைந்தேன்.
இந்த இன்னிங்ஸ் என்னையே ஆச்சரியப்படுத்தியது. 140-150 ரன்களை நோக்கியே சென்று கொண்டிருந்தோம். நான் கூட 160-165 ரன்களுக்கு முயன்றால் போதுமானது என்றே நினைத்தோம், ஆனால் 195 ரன்களை எட்டியது எனக்கே ஆச்சரியமளித்தது.
ரஸல், கமின்ஸ் வீசும் போது பிழைகளுக்கு இடமில்லை. நம்மிடம் உள்ள ஒவ்வொரு துளி ஆற்றலையும் உத்வேகம் கொடுக்க பயன்படுத்துவது அவசியம். எப்போதும் சிறந்தவற்றைச் செய்ய கடினமாக உழைத்து வருகிறேன். இருப்பதில் சிறந்தவனாக இருக்க விரும்புகிறேன், என்றார் டிவில்லியர்ஸ்.