விளையாட்டு

இன்ஸ்விங் யார்க்கர் தவிர மற்றவை மைதானத்துக்கு வெளியேதான் பறக்கும்: ’நிறுத்த முடியாத  ஏபிடி’, தினேஷ் கார்த்திக் புகழாரம்

செய்திப்பிரிவு

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020-ன் 28வது போட்டியில் ஏ.பி.டிவில்லியர்ஸ் ஒரே வீரராக ஆர்சிபிஐ வெற்றிக்கு இட்டுச் சென்றார் என்றால் அது மிகையாகாது.

ஆர்சிபி அணி ஒரு கட்டத்தில் 140 எடுத்தால் பெரிய விஷயம் என்பது போல்தான் இருந்தது. ஏனெனில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 13வது ஓவரில் 94/2 என்ற நிலையில் இருந்தாலும் பந்துகள் மட்டைக்கு வேகமாக வரவில்லை, மந்தமாக வந்ததால் மட்டையை வீச முடியவில்லை.

ஆர்சிபி அணியின் தொடக்கத்தையும் மறக்கக் கூடாது படிக்கால் (23 பந்தில் 32), பிஞ்ச் (37 பந்தில் 47) என்று 7.4 ஓவர்களில் 67 ரன்கள் என்ற நல்ல தொடக்கத்தை அளித்தனர்.

கடைசியில் ஏபிடியின் அதிரடி நம்ப முடியாததாகும், பந்துகள் மைதானத்துக்கு வெளியே பறந்து போக்குவரத்தையெல்லாம் இடைஞ்சல் செய்தது. 23 பந்துகளில் அரைசதம் கண்ட அவர் 33 பந்துகளில் 5 பவுண்டரி 6 சிக்சர் என்று 73 ரன்களை விளாசினார். கோலிக்கும் இவருக்கும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் என்றாலும் கோலி ஒரேயொரு பவுண்டரியுடன் 33 ரன்களில் ஏபிடியில் இன்னிங்ஸை மறுபுறம் நின்று ரசிக்க மட்டுமே முடிந்தது.

194/2 என்ற நிலையில் கேகேஆர் அணி டாம் பேண்ட்டன், ஷுப்மன் கில்லை தொடக்கத்தில் இறக்கி விட்டது, இருவரிடத்திலும் இலக்கை விரட்டும் தீவிரமே இல்லை. வாஷிங்டன் சுந்தர் , சாஹல், கிறிஸ் மோரிஸ் பவுலிங்கில் கொல்கத்தா இருந்த இடம் தெரியாமல் போனது 9 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்களையே எடுத்தது.

இந்நிலையில் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

ஏ.பி.டிவில்லியர்ஸ் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். அவரை நிறுத்த முடியவில்லை. இரு அணிகளுக்கும் இடையே அவர்தான் ஒரே வித்தியாசம்.

நாஙக்ள் எல்லாவற்றையும் முயன்று விட்டோம். ஒன்றும் செய்ய முடியவில்லை, துல்லிய இன்ஸ்விங்கிங் யார்க்கர் மட்டுமே சரியானதாக இருக்கும் மற்றவையெல்லாம் மைதானத்துக்கு வெளியேதான்.

நாங்கள் 175 ரன்களுக்கு அவர்களை மட்டுப்படுத்தியிருந்தாலும் கூட பேட்டிங்கில் சிலபல விஷயங்களை சரி செய்ய வேண்டியுள்ளது.

எந்த ஒரு கேப்டனுக்கும் ஒருநாள் எதுவும் சரியாக அமையாது போய்விடும். ஆனால் பல நல்ல நாட்களை என்னால் நினைவில் கொள்ள முடிகிறது. அதைப் பற்றிக் கொள்ள விரும்புகிறேன், என்றார்.

SCROLL FOR NEXT