வங்கதேச ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா ஏ அணி வென்றது. நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா ஏ 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேச ஏ அணி, இந்தியா ஏ அணியுடன் அதிகாரப்பூர்வமற்ற 3 ஒரு நாள் போட்டிகள், ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியாவும், 2-வது ஒரு நாள் போட்டியில் வங்கதேசமும் வென்றிருந்தன.
பெங்களூருவில் நேற்று நடந்த 3-வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ முதலில் பேட் செய்தது. மயங்க் அகர்வால் 4 ரன்களில் வெளியேற, கேப்டன் உன்முக்த் சந்த், சஞ்சு சாம்சன் ஜோடி பொறுப்பாக விளையாடியது. உன்முக்த் சந்த் 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ரெய்னா, சாம்சன் ஜோடி சேர்ந்தனர். கடந்த 2 போட்டிகளில் சரியாக சோபிக்காத ரெய்னா இம்முறை முழு ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார். முதலில் சாம்சன் அரைசதம் கடந்தார். தொடர்ந்து ரெய்னா அரை சதம் கடந்தார்.
இந்த ஜோடி 3-வது விக்கெட் டுக்கு 116 ரன்கள் சேர்த்தது. 90 ரன்கள் எடுத்திருந்த நிலையல் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜாதவ், (4), குர்கீரத் சிங் (4) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ரெய்னா சதம்
இதனிடையே சதமடித்த ரெய்னா 94 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷி தவண் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா ஏ 50 ஓவர் முடிவில் 297 ரன்கள் எடுத்தது.
கடின இலக்கை விரட்டிய வங்கதேச ஏ அணியின் வீரர்கள் சவும்ய சர்க்கார் (1), ரோனி தாலுக்தர் (9), அனாமுல் ஹக் (1) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அரவிந்த், குல்கர்னி வேகப்பந்து வீச்சில் இவர்கள் ஆட்டமிழந்தனர். குல்தீப் யாதவ், கரண் சர்மா ஆகியோர் சுழற்பந்து வீச்சில் கட்டுக்கோப்பாக பந்து வீச, வங்கதேச ஏ அணிக்கு நெருக்கடி தொடர்ந்தது. இதனிடையே அவ்வப்போது மழை குறுக்கிட்டது. இதனால், டக் வொர்த் லூயிஸ் விதிப்படி 44 ஓவர்களில் 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றப்பட்டது. 32 ஓவர்களில் வங்கதேசம் ஏ 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டதால், அப்போதைய சூழலில் வங்கதேசம் 217 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். எனவே, இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து 2-1 என்ற கணக்கில் இந்தியா ஏ தொடரை வென்றது.