கொல்கத்தாவுக்கு எதிராக அன்று சிஎஸ்கே வெற்றி பெற வேண்டிய போட்டியை தோற்றதையடுத்து தொடர் தோல்விகளைச் சந்தித்ததால் தோனியின் மகளைக் குறிப்பிட்டு அருவருக்கத்தக்க மிரட்டல்களை நெட்டிசன்களில் சில விஷமிகள் விடுத்தனர்.
இதனையடுத்து இது தொடர்பாக 16 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தோனியை இப்படி நடத்துவது மிகமிகத் தவறானது என்று பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரீடி கண்டனமும் வருத்தமும் வேதனையும் தெரிவித்துள்ளார்.
தோனியையும் கேதார் ஜாதவ்வையும் இன்னதுதான் என்றில்லாமல் ரசிகர்கள் கடுமையாக வசைபாடினர். இந்நிலையில் தோனி இந்திய கிரிக்கெட்டை உச்சங்களுக்குக் கொண்டு சென்றவர் என்பதை ரசிகர்களுக்குப் பாகிஸ்தானின் ஷாகித் அஃப்ரீடி நினைவூட்டினார்.
“தோனி மற்றும் அவரது குடும்பத்தை நோக்கிய அச்சுறுத்தல்கள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதெல்லாம் மிகமிகத் தவறு, அப்படி நடக்க அனுமதிக்கக் கூடாது.
இந்திய கிரிக்கெட்டை புதிய உச்சங்களுக்குக் கொண்டு சென்ற அவரை இப்படி நடத்துவது அழகல்ல. அவர் தன் பயணத்தில் இளம், மூத்த வீரர்களையும் அழைத்துச் சென்றார். அவரைப்போய் இப்படி நடத்தக் கூடாது” என்று அப்டீடி கூறியதாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் சஜ் சாதிக், தன் ட்விட்டர் பக்கத்தில் அப்ரீடியை மேற்கோள் காட்டிப் பதிவிட்டுள்ளார்.