47 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்து வெற்றி பெற வாய்ப்பில்லாத நிலையிலிருந்து அசாத்திய வெற்றியைச் சாதித்தார்கள் நேற்று ராஜஸ்தான் வீரர்களான ராகுல் திவேத்தியா மற்றும் ரியான் பராக்.
சன் ரைசர்ஸ் அணியின் ‘டெத் பவுலிங்’ சிதறடிக்கப்பட்டது. இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் 6ம் இடத்துக்கு சற்றே முன்னேறியது.
இந்நிலையில் புதிய பினிஷர் ராகுல் திவேத்தியா கூறியதாவது:
எனக்கு இந்த பினிஷிங் ரோல்தான் கொடுக்கப்பட்டுள்ளது. இது நீண்டகாலமாகவே தெளிவான ஒரு விஷயம்.
நான் இப்போது சிறப்பாக ஆடிவருகிறேன் பந்துகளை நீண்ட தூரம் அடிக்க முடிகிறது. எனவே நம் ரோல் என்னவென்பது தெளிவாகும் போது ஈஸியாக இருக்கிறது.
விக்கெட்டுகள் போய்க்கொண்டிருந்தன, எனவே ஒரு முனையை நான் இறுக்கிப் பிடித்தேன், பவுண்டரி அடிக்கக் கூடிய பந்துகளுக்காகக் காத்திருந்தேன்.
நம்பிக்கையைத் தக்கவைத்தால், ஆட்டத்தை கடைசி வரை இட்டுச் சென்றால் வெற்றிதான் என்பது எனக்குத் தெரிந்தது. நான் ரியான் பராகிடம் கூறும்போது பிட்ச்சில் பந்துகள் மெதுவாக வருகின்றன, எனவே ஆட்டத்தை கடைசி பந்து வரை இழுத்துச் சென்றால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்றேன்.
கடைசி 4 ஓவர்களில் 50 ரன்கள் என்றாலும் கவலையில்லை. ஏனெனில் எங்களிடம் ஷாட்கள் ரகம் இருந்தன.
எனக்கும் கலீல் அகமெடுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அந்தத் தருணத்தில் நடந்தது, அதன் பிறகு மறந்து விட்டோம் என்றார் திவேத்தியா.