விளையாட்டு

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கேப்டன்சி: ஆம்லா, டிவிலியர்ஸ் இடையே போட்டி

செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கிரேம் ஸ்மித்திற்குப் பிறகு அந்த அணியின் டெஸ்ட் கேப்டனாக யாரை நியமிப்பது என்ற தடுமாற்றம் இருந்து வருகிறது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணிக்கு தனது பெயரையும் பரிசீலிக்குமாறு ஹஷிம் ஆம்லா அணித் தேர்வுக்குழுவினருக்கு தெரிவித்துள்ளார்.

டிவிலியர்ஸ், டுபிளேசி ஆகியோர் ஏற்கனவே கேப்டன் பொறுப்புக்கு பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர். ஜே.பி.டுமினி பெயரும் சாத்தியப் பட்டியலில் உள்ளது. இந்த நிலையில் ஆம்லா தன்னையும் தென் ஆப்பிரிக்கா கேப்டன்சிக்கு பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே தன்னை கேப்டனாக்க வாய்ப்பில்லை என்று தெரிந்த பிறகு அவர் துணைக்கேப்டன் பொறுப்பை வெறுப்பில் உதறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, "நான் கேப்டனாக முடியாது எனும்போது துணைக்கேப்டனாக இருப்பதில் பயனில்லை" என்றார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஓய்வறையிலும் அவர் தன் கேப்டன்சி ஆசையத் தெரிவித்திருப்பதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆம்லா அனுபவமிக்க ஒரு வீரர், மேலும் ஒருநாள், டெஸ்ட், டி20 கிரிக்கெட் அனைத்திலும் முக்கியப் பங்களிப்பு செய்து வருபவர். தென் ஆப்பிரிக்க அணியின் ஒரு தவிர்க்க முடியாத வீரராகவே அவர் திகழ்கிறார். இதனால் இவருக்கே கேப்டன்சி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

டிவிலியர்ஸ் ஏற்கனவே தனது கேப்டன்சி விருப்பத்தைத் தெரிவித்திருப்பதால் அவரையும் சமாதானப்படுத்தும் ஒரு தர்மசங்கட நிலைக்கு தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தள்ளப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT