விளையாட்டு

வெற்றி முகம் காணும்போது அடிக்கும் அடி சம்மட்டி அடியாக இருக்கும்: ஹர்பஜன் சிங்

செய்திப்பிரிவு

சிஎஸ்கே அணியின் வெற்றியை ஒரு இனமே கொண்டாடும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் நேற்று (அக்டோபர் 7) சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 167 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்தத் தோல்வியால் சமூக வலைதளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடும் எதிர்வினைகளைச் சந்தித்து வருகிறது. கொல்கத்தா அணி பேட்டிங் செய்யும் போது தோனி 4 கேட்ச்கள், ஒரு ரன் அவுட் செய்தார். அப்போது 'யாருடா தோனிக்கு வயதாகிவிட்டது என்று சொன்னது' எனக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

அந்தக் கொண்டாட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கின்போது அப்படியே தலைகீழாக மாறியது. வாட்சன் பேட்டிங்கைத் தவிர மற்ற அனைவருடைய பேட்டிங்குமே கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

குறிப்பாக கேதர் ஜாதவின் பேட்டிங்கிற்கு இப்போது வரை விமர்சனங்களும், கிண்டல்களும் எதிரொலித்து வருகின்றன. இதனால் #kedarjadhav என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி குறித்து, ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இ(எ)துவும் கடந்து போகும். என்னுடைய தோல்வியை ஒரு கூட்டமே கொண்டாடுகிறது. ஆனால், என்னுடைய வெற்றியை ஒரு இனமே கொண்டாடும் என்பதை மறக்க வேண்டாம். மீண்டு வெற்றி முகம் காணும்போது அடிக்கும் அடி சம்மட்டி அடியாக இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரும்பி வருவதை ஐபிஎல் சரித்திரம் பேசும்".

இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT