ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
துபாயில் நேற்று ஐபிஎல் டி20 தொடரில் கிங்ஸ்லெவன், சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது. 179 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆடத்தொடங்கிய சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி 14 பந்துகள் மீதமிருக்கையில் 181 ரன்கள் சேர்த்து வாகை சூடியது.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே விக்கெட் இழப்பின்றி 2-வது அதிகபட்ச ஸ்கோரை சேஸிங் செய்து சாதனை படைத்தது. அதோடு மட்டுமல்லாமல் அந்த அணியின் கேப்டன் தோனி,ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லையும் எட்டினார்.
பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தபோது ஐபிஎல் தொடரில் 100 கேட்ச்சுகளைப் பிடித்த 2-வது விக்கெட் கீப்பர் எனும் மைல்கல்லை எட்டினார்.
ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை, இதுவரை தோனி 195 போட்டிகளில் 188 இன்னிங்ஸ்களில் 139 டிஸ்மிஸல்களை செய்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இதில் 100-வது கேட்ச்சை நேற்று பிடித்தார், 39 ஸ்டெம்பிங்குகளைச் செய்துள்ளார்.
ஆனால், கேட்ச் பிடித்தவகையில், முதலிடத்தில் தினேஷ் கார்த்திக் இருக்கிறார். ஒட்டுமொத்த டிஸ்மிஸல்களைப் பொறுத்தவரை 2-வது இடத்தில் கார்த்திக் இருந்தாலும், கேட்ச் பிடித்தவகையில் முதலிடம்.
இதுவரை தினேஷ் கார்த்திக் 186 ஐபிஎல் போட்டிகளில் 170 இன்னிங்கஸ்களில் 133 டிஸ்மிஸல்களைச் செய்துள்ளார். இதில் 103 கேட்ச்சுகள், 30 ஸ்டெம்பிங்குகள் அடங்கும்.
தினேஷ் கார்த்திக்கைத் துரத்திப் பிடிக்க தோனிக்கு இன்னும் 3 கேட்ச்சுகளே உள்ளன. அதேசமயம், டிஸ்மிஸல்களில் தோனியைப் பிடிக்க 6 டிஸ்மிஸல்களே இருக்கின்றன. இந்த ஐபிஎல் தொடரில் இருவரில் யார், யாரை முந்தப்போகிறார்கள் என்று வரும் போட்டிகளில் தெரியவரும்.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் தோனி களமிறங்கியபோது, ஐபிஎல் போட்டிகளில் அதிகமான பங்கேற்ற வீரர் எனும் பெருமையைப் பெற்று ரெய்னாவைப் பின்னுக்குத் தள்ளினார். ரெய்னா 193 ஐபிஎல் போட்டிகளில் மட்டும் பங்கேற்றிருந்தார். அதில் 164 ஆட்டங்கள் சிஎஸ்கே அணிக்கு மட்டும் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 192 போட்டிகளிலும், ஆர்சிபி கேப்டன் விராட் கோலி 180 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.