வங்கதேச ஏ அணிக்கு எதிரான 3 நாள் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி 33 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. முன்னதாக வங்கதேச ஏ அணி தனது முதல் இன்னிங்ஸில் 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச ஏ அணி, இந்தியா ஏ அணியுடன் அதிகாரப்பூர்வமற்ற 3 நாள் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. டாஸ் வென்ற இந்தியா ஏ அணியின் கேப்டன் ஷிகர் தவண் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
வங்கதேச ஏ அணி வருண் ஆரோன் வேகத்தில் ஆட்டம் கண்டது. சவும்யா சர்க்கார், லிட்டன் தாஸ் ஆகியோரை ரன்களே எடுக்க விடாமலும், மோமினுல் ஹக்கை 2 ரன்களிலும் வெளியேற்றினார் ஆரோன். அனாமுல் ஹக் ஈஷ்வர் பாண்டே பந்து வீச்சில் ரன் கணக்கைத் தொடங்காமலேயே வெளியேறினார்.
இதனால் வங்கதேச ஏ 6 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் ஆபத்பாந்தவனாக வந்தார் சப்பிர் ரஹ்மான்.
மறுமுனையில் நாசர் ஹுசைனையும், ஸ்வாகதா ஹோமையும் வைத்துக் கொண்டு அணியைச் சரிவிலிருந்து மீட்டார்.
நாசர் ஹுசைன் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். சப்பிர் ரஹ்மான்-ஸ்வாகதா ஹோம் இணை பொறுப்பான முறையில் ஆடியது. இந்த ஜோடியை வருண் ஆரோன் பிரித்தார். ஸ்வாகதா ஹோம் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனிடையே சப்பிர் ரஹ்மான் சதம் அடித்தார். பின்வரிசை ஆட்டக்காரர்கள் சக்லைன் சஜிப் (4), ஷபியுல் இஸ்லாம் (0), ருபெல் ஹுசைன் (0), ஜுபைர் ஹுசைன் (0) ஆகியோரை ஜெயந்த் யாதவ் வழியனுப்பி வைத்தார்.
சப்பிர் ரஹ்மான் ஆட்ட மிழக்காமல் 122 ரன்கள் குவித்தார். அவர் 23 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாசினார்.
வங்கதேச ஏ அணி முதல் இன்னிங்ஸில் 52.4 ஓவர்களில் 228 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது. இந்தியா ஏ தரப்பில் ஆரோன், ஜாதவ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அதிரடி தொடக்கம்
இந்தியா ஏ அணியின் முதல் இன்னிங்ஸை அபினவ் முகுந்த், தவண் தொடங்கினர். தவண் தொடக்கத்திலிருந்தே அடித்து ஆடினார். முகுந்த் 78 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 112 பந்துகளைச் சந்தித்த தவண் 116 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அவர் 16 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை விளாசியுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
இந்தியா ஏ அணி 33 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. வங்கதேச ஏ அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட இன்னும் 67 ரன்கள் தேவைப்படுகின்றன. இன்னும் 9 விக்கெட்டுகள் கைவசம் இருப்பதால் இந்தியா ஏ வலுவான நிலையில் உள்ளது. 2-ம் நாள் ஆட்டத்தில் விரைவாக ரன் குவித்து அதிக முன்னிலையுடன் வங்கதேச ஏ அணிக்கு நெருக்கடி அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.