விளையாட்டு

கோலியின் ஆட்டத்தை வீட்டிலிருந்துதான் பார்த்திருக்கிறேன்.. அவருடன் பேட் செய்வது நிஜம்தானா என்று தோன்றியது: படிக்கால் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் 2020 தொடரின் 15வது போட்டியில் நேற்று ஆர்சிபி தொடக்க வீரர் படிக்கால் தனது 3வது அரைசதத்தை எடுத்து அபாரமாக ஆடினார்.

கோலியுடன் அமைத்த கூட்டணி ராஜஸ்தான் ராயல்ஸின் சாதாரண இலக்கை மிகவும் எளிதாக எட்ட உதவியது.

இந்நிலையில் கோலியுடன் பேட் செய்த அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் படிக்கால் கூறும்போது, “கோலியுடன் பேட் செய்வது ஒரு வித்தியாசமான உணர்வு. நான் இளம் வயது முதல் அவர் பேட்டிங்கை வீட்டிலிருந்துதான் பார்த்திருக்கிறேன். இப்போது அவருடன் சேர்ந்து பேட் செய்வது நிஜம்தானா என்ற உணர்வை ஏற்படுத்தியது.

நான் களைப்படைந்தேன் அவர்தான் என்னை ஊக்குவித்துக் கொண்டே இருந்தார். வெற்றி பெறும் வரை நிற்க வேண்டும் என்று கூறிக்கொண்டேயிருந்தார். அவர் அப்படித்தான் பேட் செய்வார், எனக்கும் அதையே கூறினார்.

பந்தின் தன்மையைப் பொறுத்தே ஷாட் தேர்வு செய்வேன். பந்தை நெருக்கமாக அவதானித்து முடிவெடுப்பேன். மிகவும் வெப்பம். 20 ஓவர் பீல்ட் செய்து விட்டு இறங்குவது கடினமாக இருந்தது.

முதல் இன்னிங்ஸை ஆடும்போதுதான் கொஞ்சம் பதற்றம் இருந்தது, இப்போது என் பணியின் அங்கமாகி விட்டது” என்றார் படிக்கால்.

SCROLL FOR NEXT