இளம் பேட்ஸ்மென்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஷாட் ஆடுவதில் வல்லவர்களாக இருந்தாலும், ஒவ்வொரு ரன்னாக எடுத்து எதிர்முனை பேட்ஸ்மெனை விளையாடச் செய்து, பந்துவீச்சின் பொறுமையை சோதித்து, ஜோடியாக நின்று பெரிய இன்னிங்ஸ்களை கட்டமைக்கும் பொறுமை இல்லாதவர்களாக உள்ளனர் என்று கூறியுள்ளார்.
இது குறித்து ஈ.எஸ்.பி.என்.-கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் அவர் கூறியதாவது:
ஷாட் ஆடுவதில் இளம் தலைமுறையினர் அபாரமாகத் திகழ்கின்றனர். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மேலேறி வந்து சிக்சர்கள் அடிக்கும் படைப்பூக்கம் அபாரமானது, ஆனால் இந்திய கிரிக்கெட்டை பொறுத்த வரை பிரச்சினை என்னவெனில் இரு அணுகுமுறைக்கும் இடையே ஒரு சமநிலை இல்லை. ஒன்று சிக்சர், பவுண்டரிகளாக அடிப்பது, இல்லையேல் மேலதிக தடுப்பாட்ட உத்தியைக் கடைபிடிப்பது, இதனால் இவர்களுக்கு பீல்ட் அமைப்பது எளிது.
ஸ்ட்ரைக்கை மாற்றி மாற்றி வைத்துக் கொள்வது, ஜோடி சேர்ந்து பொறுமையாக இன்னிங்சை கட்டமைப்பது, எல்லைக்கோட்டருகே பீல்டர்கள் நிற்க வைக்கப்படும்போது எளிதாக சிங்கிள் எடுப்பது, எப்போதும் கவர் மற்றும் பாயிண்டில் அடிக்காமல் இருப்பது, லாங் ஆன், லாங் ஆஃபில் சிங்கிள்கள் ஆடுவது என்ற ரிஸ்க் அற்ற கிரிக்கெட் ஆட்டத்தை இவர்களிடத்தில் வளர்த்தெடுப்பது அவசியம் என்று கருதுகிறேன். ஒன்று தடுப்பாட்டம், இன்னொன்று அடித்து ஆடுவது, இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு ஆட்டம் உள்ளது.
ஏனெனில் நெருக்கடியில் ஆடும்போது பெரிய ஷாட்களை ஆடமுடியாது, தடுப்பாட்டமும் நம் மீது அழுத்தத்தை அதிகரிக்கும்.
கடந்த தொடரில் இந்திய அணிக்கு சில தருணங்களில் இதுதான் நடந்தது. எனவே ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்யாததால் விக்கெட்டுகள் மடமடவென விழுந்தது. நாம் ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக திடீரென மோசமான வீரர்களாகிவிடவில்லை. டி20 கிரிக்கெட்டில் ஆடி ஆடி, சிங்கிள் எடுப்பதன் மதிப்பு பற்றி இவர்களுக்கு தெரிவதில்லை. இதில் விவிஎஸ். லஷ்மண், அல்லது மொகமது அசாருதீன் ஆகியோரை உதாரணம் காட்டுவேன்.
இளம் வீரர்களிடம் நீண்ட நாள் கிரிக்கெட் போட்டிகளின் மீதான ஆர்வம் குறைந்ததாக நான் கருதவில்லை, அனைவரும் டெஸ்ட் போட்டிகளில் ஆட வேண்டும் என்பதில் மிக ஆர்வமாக உள்ளனர், ஆனால் இப்போதைய சூழல் வேறு மாதிரி உள்ளது, டி20 கிரிக்கெட்டாக ஆடிவிட்டு திடீரென சென்னையில் வந்து வறண்ட பிட்சில் ஆடவேண்டும் என்றால் அதற்கு நிதானமும் பொறுமையும் தேவை என்றே நான் கருதுகிறேன்.
எனது கால கிரிக்கெட் வீரர்களுக்கு இப்போதிருக்கும் வீரர்கள் போன்று வாய்ப்புகள் கிட்டியதில்லை. எங்கள் காலத்தில் விளையாட்டின் மூலம் ஒரு நீண்ட கால வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமெனில் நீண்ட நாள் கிரிக்கெட் ஆட்டமே ஒரே வழி. இன்று டுவெண்டி 20 கிரிக்கெட். எனவே வாய்ப்புகளின் வழிமுறைகள் மாறிவிட்டது” என்றார் திராவிட்.