ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் டி20 தொடரில் ஒரு அணியின் வீரரிடம் ஸ்பாட் பிக்ஸிங் செய்வதற்கான செயல்களில் ஈடுபட சூதாட்டத் தரகர்கள் அணுகியுள்ளதாகவும், அந்த வீரரும் பேசியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதை அடுத்து, பிசிசிஐ அமைப்பின் ஊழல் தடுப்புப் பிரிவு தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சூதாட்டப் புகாரில் சிக்கின. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் மீது சூதாட்டப் புகார் கூறப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். இதில் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை முடிந்துள்ளது. இதில் ராஜஸ்தான், சிஎஸ்கே அணிகள் இரு ஆண்டுகள் தடைக்குப் பின் மீண்டும் விளையாடி வருகின்றன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பிசிசிஐ அமைப்பும், ஐபிஎல் நிர்வாகமும் வீரர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளன. சமூக ஊடகங்களில் மிகவும் ஈடுபடாக இருந்தாலும், சூதாட்டத் தரகர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று பல்வேறு அறிவுரைகளையும், பயிற்சி வகுப்புகளையும் பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகம் வீரர்களுக்கு அளித்துள்ளன.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஐபிஎல் டி20 தொடரில் ஒரு அணியின் வீரர் ஒருவரை, ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபடுத்த சூதாட்டத் தரகர்கள் அணுகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அமைப்பின் ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவர் அஜித் சிங்கிடம் பிடிஐ நிருபர் கேட்டபோது, ஒற்றை வரியில், “ஆம், சூதாட்டத் தரகர்கள் வீரர் ஒருவரை அணுகியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
ஆனால், அவர் உள்நாட்டு வீரரா, அல்லது வெளிநாட்டு வீரரா, இந்திய அணியில் இருப்பவரா, அல்லது எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர், எந்த நாட்டு அணியைச் சேர்ந்தவர் எனக் கேட்டதற்கு பதில் அளிக்க அஜித் சிங் மறுத்துவிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், “நாங்கள் அந்த வீரரைக் கண்காணித்து வருகிறோம். அவரும் சூதாட்டத் தரகருடன் பேசியுள்ளார். அவரைப் பிடிக்க சிறிது காலமாகும்” எனத் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக அணியின் வீரர்கள், மற்ற ஊழியர்கள் அனைவரும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் இருப்பதால், வெளிநபர்கள் யாரும் அணுகமுடியாது. ஆனால், சமூக ஊடகங்களின் வழியாக அந்த வீரரை அணுகியிருக்கலாம் என்று ஊழல் தடுப்புப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து பிபிசிஐ அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்திய வீரர்கள், இந்திய அணியில் உள்ள வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் பிசிசிஐ ஊழல் தடுப்புப் பிரிவின் பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ளனர்.
யாரேனும் அணுகினால் உடனுக்குடன் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புகார் அளிக்க வீரர்களை அறிவுறுத்தியுள்ளோம். 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கும் இதே அறிவுரை தரப்பட்டுள்ளது. கவுன்சிலிங் வகுப்புகளும் 8 அணிகளின் வீரர்களுக்கு நடத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
பிரிட்டனைச் சேர்ந்த ஸ்போர்ட் ராடர் எனும் நிறுவனத்துடன் கூட்டு வைத்துள்ள பிசிசிஐ நிர்வாகம், ஐக்கிய அரபு அமீரகத்தில் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்களா என ரகசியமாகக் கண்காணித்து வருகிறது. இந்த ஸ்போர்ட் ராடர் நிறுவனம் சூதாட்டம் தொடர்பாக உளவுப் பணிகளில் ஈடுபட்டு பிசிசிஐக்கு உதவுகிறது.