சன் ரைசர்ஸ் ஹைதராபாத் நேற்று 11 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 69 ரன்கள்தான். பொதுவாக சென்னை சூப்பர் கிங்ஸ் எந்த அணியையும் இந்த நிலையிலிருந்து எழும்ப விடுவது வழக்கமல்ல.
19 வயது பிரியம் கார்க், 20 வயது அபிஷேக் சர்மா, 18 வயது அப்துல் சமது ஆகிய இளம் வீரர்கள் மட்டுமே மீதம் இருந்தனர். அதுவும் பிரியம் கார்க், சன் ரைசர்ஸின் சிறந்த பேட்ஸ்மெனான கேன் வில்லியம்சன் ரன் அவுட் ஆவதற்குக் காரணமாக அமைந்தார்.
இந்நிலையில் சிஎஸ்கே வெற்றி நிச்சயம் என்றே சென்னை ரசிகர்கள் எதிர்நோக்கியிருப்பார்கள். ஸ்டீபன் பிளெமிங்கும் அபிஷேக் சர்மா, பிரியம் கார்க் பற்றி அனைத்து தகவல்களைத் திரட்டியதாகவும் வீடியோ பதிவுகளும் கிடைத்தன என்றும் தெரிவித்தார், ஆனால் அதே வேளையில், ‘அவர்கள் நன்றாக ஆடினர்’ என்று ஏற்றுக் கொள்ளவும் செய்தார். மேலும் ‘அதுதான் இளரத்தம் என்பது வந்தார்கள் அடித்தார்கள்’ என்றும் ஸ்டீபன் பிளெமிங் பாராட்டினார். டாடீஸ் ஆர்மிக்கு எதிராக சன்ஸ் ஆர்மி வெளுத்துக் கட்டியது.
பிரியம் கார்க் 26 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 51 எடுக்க, அபிஷேக் சர்மா 24 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் உடன் 31 ரன்கள் எடுத்தார். இருவரும் சேர்து 7 ஓவர்களில் 77 ரன்கள் விளாசினர். வெற்றிக்கும் தோல்விக்குமான இடைவெளி இந்தக் கூட்டணிதான்.
சாம் கரண் ஓவரில் 22 ரன்கள் வர பிரியம் கார்க் 23 பந்துகளில் அரைசதம் கண்டார். கார்கும் அபிஷேக் சர்மாவும் நிறைய சேர்ந்து ஆடிஉள்ளனர். ஆட்ட நாயகனாக பிரியம் கார்க் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆட்ட நாயகன் பரிசு வாங்கிய போது பிரியம் கார்க் கூறும்போது, “பெரிய வீரர்களுடன் களம் காண்பது என்னிடத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. என்னுடைய இயல்பான ஆட்டத்தையே ஆடினேன்.
முதல் ஆட்டத்தில் நான் சோபிக்கவில்லை என்றாலும் அணி என் மீது நம்பிக்கை வைத்தது தன்னம்பிக்கையை ஊட்டியது.
திட்டம் என்னவெனில் இறங்கி ஷாட்களை ஆடுவதுதான், சிஎஸ்கே பந்து வீச்சும் இதற்கு உதவியது. அபிஷேக் உடன் நான் என் சிறுபிராயம் முதல் பேட் செய்து வருகிறேன் எனவே புரிதல் எளிதாக இருந்தது.
இப்படிப்பட்ட இன்னிங்ஸினால் பிறகு பந்து வீசக் களமிறங்கிய போது நல்ல உற்சாகம் தரும் ஆற்றல் இருந்தது. இந்த இன்னிங்ஸுக்குப் பிறகு என் தன்னம்பிக்கையும் வளர்ந்துள்ளது” என்றார் பிரியம் கார்க்.