கடந்த 25 ஆண்டுகளில் சிறந்த ஆஸ்திரேலிய அணியை அறிவித்து பரபரப்பூட்டிய ஷேன் வார்ன், அடுத்ததாக இங்கிலாந்து அணியை அறிவித்துள்ளார்.
இந்த அணியில் இங்கிலாந்தின் அதிக ரன்களை எடுத்த வீரரும் தற்போதைய ஆஷஸ் வின்னிங் கேப்டனுமான அலிஸ்டர் குக் இல்லை, முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் இல்லை, மிக முக்கியமாக இங்கிலாந்து கொண்டாடும் உலகம் போற்றும் ஆல்ரவுண்டர் இயன் போத்தம் இல்லை.
இவரது இந்த அணிக்கு மைக்கேல் வான் கேப்டன், அவருக்கு மிகவும் பிடித்த கெவின் பீட்டர்சன் இல்லாமலா?... இருக்கிறார்.
சர் இயன் போத்தம் இல்லாதது பற்றி தனது பேஸ்புக்கில் குறிப்பிட்ட ஷேன் வார்ன், “நான் துரதிர்ஷ்டவசமாக இயன் போத்தமுடன் டெஸ்ட் கிரிக்கெட் ஆடவில்லை. இல்லையெனில் அவர் இல்லமாலா? உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் அவர்” என்று கூறியுள்ளார்.
அதே போல், “ஆண்ட்ரூ ஸ்ட்ராஸை விட்டிருப்பது கடினமான முடிவே. ஆனால் டிரெஸ்கோதிக் அவரது இடத்தில் சிறந்தவர் என்று நான் கருதுகிறேன். அலிஸ்டர் குக்கும் மனதில் இருந்தார், ஆனால் கிரகாம் கூச், டிரெஸ்கோதிக் தொடக்க ஜோடியை விரும்புகிறேன்.
அதே போல் 5-ம் இடத்துக்கு இயன் பெல், கிரகாம் தோர்ப், ஜோ ரூட், நாசர் ஹுசைன் பெயர்கள் வந்தாலும், மைக் கேட்டிங் என்னைப் பொறுத்தவரையில் இந்த அணியில் இடம்பெற வேண்டியவர்” என்று வார்ன் பதிவிட்டுள்ளார்.
விக்கெட் கீப்பராக அலெக்ஸ் ஸ்டீவர்டையும், ஆல்ரவுண்டராக ஆண்ட்ரூ பிளிண்டாஃபையும் தேர்வு செய்தார் ஷேன் வார்ன்.
ஷேன் வார்னின் சிறந்த இங்கிலாந்து அணி வருமாறு: கிரகாம் கூச், மார்கஸ் டிரெஸ்கோதிக், மைக்கேல் வான் (கேப்டன்), கெவின் பீட்டர்சன், மைக் கேட்டிங், அலெக்ஸ் ஸ்டீவர்ட், ஆண்ட்ரூ பிளிண்டாப், ஸ்டூவர்ட் பிராட், கிரேம் ஸ்வான், டேரன் காஃப், ஜேம்ஸ் ஆண்டர்சன்.