உலகக் கோப்பை 2015-ன் போது எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் (அரையிறுதி நீங்கலாக) இந்திய அணியினர் வீழ்த்தியது போல் தற்போது இலங்கைக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளிலும் அந்த அணியை 6 முறை ஆல் அவுட் செய்து 60 விக்கெட்டுகளை இந்திய அணியினர் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கைக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில் 117 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 2-1 என்று கைப்பற்றி 22 ஆண்டுகளூக்குப் பிறகு இலங்கை மண்ணில் சாதனை புரிந்துள்ளது, இந்த தொடர் சார்ந்த முக்கிய புள்ளி விவரங்கள் வருமாறு:
1988-89 நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் இந்தியா அந்த 3 டெஸ்ட் போட்டிகளில் எதிரணியினரின் 60 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது. தற்போது 2015-ல் கோலி தலைமையில் இந்திய பவுலர்கள் மீண்டும் அனைத்து இன்னிங்ஸ்களிலும் இலங்கையை ஆல் அவுட் செய்து 60 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை புரிந்தது.
1988-89 தொடரில் இந்திய ஆஃப் ஸ்பின்னர் அர்ஷத் அயூப், லெக் ஸ்பின்னர் நரேந்திர ஹிர்வாணி ஆகியோர் 60-ல் 41 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர். ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில், 3 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் எதிரணியினரின் 60 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளமை 11-வது முறையாகும்.
2011-ல் மேற்கிந்திய தீவுகளை 1-0 என்று டெஸ்ட் தொடரில் வீழ்த்திய இந்திய அணி அதன் பிறகு இப்போது மீண்டும் அயல்நாட்டு டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
அயல்நாட்டில் எதிரணியினரை 2-1 என்று இந்திய அணி வீழ்த்துவது இதோடு சேர்த்து 5-வது முறையேயாகும்.
4வது இன்னிங்ஸில் சதம் எடுக்கும் 4-வது இலங்கை கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் ஆவார். இவருக்கு முன்னதாக 2009 ஆம் ஆண்டு குமார் சங்ககாரா பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தை டிரா செய்யும் போது 130 ரன்கள் எடுத்தார். இதில் அவர் நாட் அவுட்டாகவும் திகழ்ந்தார். முன்னதாக மகேலா ஜெயவர்தனே, திலிப் மெண்டிஸ் ஆகியோரும் இதனைச் செய்துள்ளனர்.
கபில்தேவ் (434), ஸ்ரீநாத்(236), ஜாகீர் கான் (311) ஆகியோருக்கு அடுத்த படியாக 200 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 4-வது வேகப்பந்து வீச்சாளரானார் இசாந்த் சர்மா.
இந்தத் தொடரில் 37 விக்கெட்டுகளை இந்திய ஸ்பின்னர்கள் கைப்பற்றியுள்ளனர். அஸ்வின் மட்டும் இதில் 21 விக்கெட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வின் இந்தத் தொடர் பவுலிங் சராசரி 18.09. இதற்கு முன்பாக எராப்பள்ளி பிரசன்னா நியூஸிலாந்துக்கு எதிராக 4 டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்தில் 24 விக்கெட்டுகளைக் கைப்பற்றியபோது அவரது சராசரி 18.79 என்பது குறிப்பிடத்தக்கது.