கிரிக்கெட் வீரர் மாக்ஸ்வெல்லைப் பற்றிய தவறான கருத்துக்குப் பதிலடி கொடுத்துள்ளார் அவரது காதலி வினி ராமன்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடந்து வரும் ஐபிஎல் 2020 தொடரில் விளையாடி வருகிறார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல். இந்த வருடம் பிப்ரவரி அன்று தனது காதலி வினி ராமனுடன் திருமண நிச்சயம் நடந்ததை அறிவித்திருந்தார். ஆஸ்திரேலியாவில் வளர்ந்த வினி ராமன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
சமீபத்தில் இவர் மேக்ஸ்வெல்லுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். "ஊரடங்கில் இன்னொரு வார இறுதி, நானும் யு.ஏ.இல் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். 4 வாரங்கள் முடிந்துவிட்டன, இன்னும் எவ்வளவோ?" என்று இதோடு பதிவிட்டிருந்தார்.
இதற்குப் பதில் கருத்து பதிவிட்டிருந்த ஒருவர், "மனநலம் பாதிக்கப்பட்ட வெள்ளை நிறத்தவரை விட்டுவிடு வினி ராமன். அவருக்காக நீ பரிதாபப்பட வேண்டும். துரோகம் செய்யாமல் ஒரு இந்தியரைத் தேடிப் பிடி" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு வினி ராமன், "நீங்கள் என் பதில் வர வேண்டுமென்று தானே இதைப் போட்டிருக்கிறீர்கள். தருகிறேன். உங்களைப் போல நான் எந்த நிறத்தையும் பார்ப்பதில்லை. ஒருவர் எந்த நாடு, எந்த இனம் என்று பார்க்காமல் என்னால் அன்பு செலுத்த முடியும். அது முழுக்க என் விருப்பம். இணையத்தில் முகமில்லாமல் தெரியும் ஏதோ ஒருவரது கருத்தை வைத்து எனது வாழ்க்கை முடிவுகளை எடுக்க முடியாது. அதை நியாயப்படுத்தவும் தேவையில்லை. நீங்கள் பார்ப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் கடந்து சென்று விடுங்கள்" என்று பதிலளித்துள்ளார்.
இதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்திருக்கும் மேக்ஸ்வெல், "உன்னை நினைத்துப் பெருமையடைகிறேன் வினி ராமன். சிலர் இப்படித்தான். உண்மையிலேயே பரிதாபகரமானவர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.