ஆட்டநாயகன் விருது வென்ற ரஷித் கான் : கோப்புப்படம் 
விளையாட்டு

என்னுடைய மிகச்சிறந்த ரசிகை என் அம்மாதான்; நான் ஆட்டநாயன் விருது வாங்கும்போது அதைப் பார்க்க என் தாய் இல்லை: ரஷித் கான் கண்ணீர் 

பிடிஐ

என்னுடைய மிகச்சிறந்த ரசிகை என்னுடைய அம்மாதான். ஐபிஎல் தொடரில் நான் ஆட்டநாயகன் விருது வாங்கும்போது அதைக் காண இந்த நேரத்தில் அவர் உயிருடன் இல்லை என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ரஷித் கான் கண்ணீரை அடக்க முடியாமல் தெரிவித்தார்.

அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. 163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே சேர்த்து 15 ரன்களில் தோல்வி அடைந்தது.

4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான் ஆட்டநாயகன் விருது பெற்று மீண்டும் டி20 போட்டியில் தனது வழக்கமான ஃபார்முக்குத் திரும்பினார்.

ஆட்ட நாயகன் விருது பெற்றபின், ரஷித் கான் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''இன்று நான் வாங்கிய ஆட்டநாயகன் விருதை மறைந்த என்னுடைய அம்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்த உலகில் எனக்கு மிகப்பெரிய ரசிகை என்னுடைய அம்மாதான். கடந்த ஒன்றரை ஆண்டுகளும் எனக்கு மிகக்கடினமான காலமாக இருந்தது.

கடந்த ஓராண்டுக்குமுன் என்னுடைய அப்பா காலமானார். கடந்த ஜூன் மாதம் என்னுடைய தாய் உயிரிழந்தார். நான் அந்தத் துக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கு சில மாதங்கள் ஆகின.

இந்த உலகிலேயே என்னுடைய ஆட்டத்துக்கு தீவிர ரசிகை என்னுடைய அம்மாதான். குறிப்பாக ஐபிஎல் போட்டியில் நான் பந்துவீசுவதை மிகவும் ரசிப்பார். நான் ஆட்டநாயகன் விருது வென்ற ஒவ்வொரு முறையும் என்னுடன் தொலைபேசியில் பேசுவார். ஆனால், இன்று என்னுடன் பேசுவதற்கு அவர் உயிருடன் இல்லை. (கண்ணீர்விட்டார்)

இந்த முறை நான் களத்துக்கு வந்தபின் எந்தவிதமான நெருக்கடியையும் சந்திக்கவில்லை.பந்துவீச்சுக்குச் சாதகமாக மைதானம் இருந்ததால், வழக்கமான ஆடுகளத்தைவிட பந்துகள் வேகமாகச் சென்றன. நான் பந்துவீசத் தொடங்கிய முதல் ஓவரிலேயே எது சரியான லென்த், சரியான வேகம் என்பதை அறிந்துகொண்டேன்.

வார்னர் எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பார். அணிக்கு எது சிறந்தது எது என உனக்குத் தெரியும். அதைச் செய் எனச் சுதந்திரமாக விட்டுவிடுவார். எனக்குப் பந்துவீச்சு சரியாக எடுக்கவில்லை என்றால் மட்டும் வார்னரிடம் ஆலோசனை கேட்பேன்''.

இவ்வாறு ரஷித் கான் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT