துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020 போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக ஆர்சிபி அணி அடைந்த தோல்வியில் கேப்டன் விராட் கோலி, சதக்கேப்டன் ராகுலுக்கு 2 கேட்ச்களை விட்டார்.
பிறகு பேட்டிங்கில் கொடியேற்றி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வர்ணனையில் இருந்த கவாஸ்கர், ‘லாக் டவுன் சமயத்தில் விராட் கோலி, அனுஷ்கா சர்மா பவுலிங்கைத்தான் ஆடி பயிற்சி எடுத்துக் கொண்டார் போலும்’ என்று நகைச்சுவையாகக் கூறினார், இது ரசிகர்கள் மத்தியில் கோபாவேசத்தைக் கிளப்பியதோடு அனுஷ்கா ஷர்மா மத்தியிலும் கோபாவேசத்தைக் கிளப்பியுள்ளது.
யுஏஇ.யில் கோலியுடன் இருக்கும் அனுஷ்கா ஷர்மா இன்ஸ்டாகிராமில் கவாஸ்கருக்குப் பதில் அளித்துள்ளார், அதில், “மிஸ்டர் கவாஸ்கர் உங்கள் கருத்து ரசனைகெட்டதாக இருக்கிறது என்பது உண்மையே.
கணவரின் ஆட்டத்துக்கு மனைவியை குற்றம்சாட்டி இப்படி ஒரு கருத்தை ஏன் நீங்கள் கூறினீர்கள் என்பதை நீங்கள் விளக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் நீங்கள் எந்த ஒரு கிரிக்கெட் வீரரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் மதித்து வந்தீர்கள். என் மீதும் சரிசமமான மரியாதையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டமா?
என் கணவரின் ஆட்டத்தை வர்ணிக்க உங்களிடம் நிச்சயம் வேறு வார்த்தைகளும் வாக்கியங்களும் இருக்கவே செய்யும். ஒரு வேளை அது அர்த்தமளிக்காது போய்விடும் என்பதற்காக என் பெயரை இழுப்பதன் மூலம் உங்கள் கூற்றுக்கு மதிப்பு சேர்த்துக் கொண்டீர்களா..
இது 2020 ஆனால் இன்னும் கூட என்னைப் பொறுத்த விஷயத்தில் எதுவும் மாறவில்லை. எப்போது என் பெயரை கிரிக்கெட் விஷயத்தில் இழுப்பது நிறுத்தப்படும். மதிப்பிற்குரிய கவாஸ்கர் அவர்களே, இந்த ஜெண்டில்மேன்களின் ஆட்டத்தில் உங்கள் பெயர் மிகப்பெரிய இடத்தில் உள்ளது.
நீங்கள் கூறியதற்கு நான் என்ன உணர்ந்தேனோ அதைத்தான் கூறியுள்ளேன்” என்று அனுஷ்கா ஷர்மா கூறியுள்ளார்.