வியாழனன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ், மாரடைப்பால் மும்பையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 59.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் தற்போது ஐபிஎல் டி20 போட்டிகளுக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தளத்தில் வர்ணனையாளராகப் பணியாற்றி வந்தார்.
ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளர் பணிக்காக மும்பையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஜோன்ஸ் தங்கி இருந்த நிலையில், இன்று அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரைச் சிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தும், சிகிச்சை பலனளிக்காமல் ஜோன்ஸ் உயிரிழந்தார்.
இந்நிலையில் மும்பை விடுதியின் தாழ்வாரத்திலேயே மாரடைப்பினால் அவர் சரிய சக வர்ணனையாளரும் ஆஸ்திரேலியருமான பிரெட் லீ உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சையாக அவரது உயிரை மீட்கும் விதமாக நின்று போன இருதயத்தை மீண்டும் செயல்பட வைக்கும் சிபிஆர் கருவி மூலம் ஜோன்ஸுக்கு மீண்டும் உயிரூட்ட பிரயத்தனம் செய்துள்ளார்..
இது தொடர்பாக ஆஸி. ஊடகம் ஒன்று தன் செய்தியில், “டீன் ஜோன்ஸ் விடுதி தாழ்வாரத்தில் மாரடைப்பினால் மயங்கிச் சரிய அவருடன் இருந்த பிரெட் லீ கார்டியோ-பல்மனரி ரிசசிடேஷன் என்ற இருதய-நுரையீரல் உயிரூட்டல் கருவி என்ற சிபிஆர் கருவி மூலம் டீன் ஜோன்ஸின் இருதயத்தை ஒட வைக்க முயற்சி செய்தார்” என்று தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னையில் சுட்டெரிக்கும் வெயிலில் டெஸ்ட் இரட்டைச் சதம் எடுத்தவர், ஜாண்ட்டி ரோட்ஸுக்கு முன்பே பீல்டிங்கில் தரத்தை பலமடங்கு உயர்த்தியவர், ஒருநாள் கிரிக்கெட்டில் பல புதிய ஷாட்களை அறிமுகம் செய்து அதற்கு புத்துயிரூட்டியவர் டீன் ஜோன்ஸ். அவர் இன்று நம்மிடையே இல்லை.