ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் திடீர் மாரடைப்பால் இன்று மரணமடைந்ததற்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலர் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபின், தற்போது ஐபிஎல் டி20 போட்டிகளுக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தளத்தில் வர்ணனையாளராகப் பணியாற்றி வந்தார்.
ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளர் பணிக்காக மும்பையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஜோன்ஸ் தங்கி இருந்த நிலையில், இன்று அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரைச் சிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தும், சிகிச்சை பலனளிக்காமல் ஜோன்ஸ் இன்று உயிரிழந்தார்.
ஜோன்ஸ் மரணத்துக்கு கிரிக்கெட் நட்சத்திர வீரர்கள் பலர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர்
டீன் ஜோன்ஸ் காலமாகிவிட்ட செய்தி என் நெஞ்சை உலுக்குகிறது. அற்புதமான மனிதர் விரைவாக உலகத்தை விட்டுச் சென்றுவிட்டார். என்னுடைய முதல் ஆஸ்திரேலியப் பயணத்தின்போது அவருக்கு எதிராக விளையாட வாய்ப்புக் கிடைத்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
விராட் கோலி (இந்திய அணியின் கேப்டன்)
டீன் ஜோன்ஸ் மறைவுச் செய்தி எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு மன தைரியத்தை வழங்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
சுனில் கவாஸ்கர்
எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் கிரிக்கெட் வீரர்களில் ஜோன்ஸ் முக்கியமானவர். கிரிக்கெட்டிலும், பேட்டிங்கிலும் புதிய தரத்தை ஜோன்ஸ் கொண்டுவந்தார். விக்கெட்டுகளுக்கு இடையே ரன் எடுப்பதில் சுறுப்பாக இருப்பார். பீல்டிங்கிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர். பெரும்பாலும் எக்ஸ்ட்ரா கவர் திசையில்தான் ஜோன்ஸ் நிற்பார். கடந்த 1980களில் கிரிக்கெட் போட்டிகளில் ஜோன்ஸ் ஆடிய ஷாட்கள் புதிதாக இருந்தன. அதனால் பல ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.
டேவிட் வார்னர்(ட்விட்டர்)
என்னால் ஜோன்ஸ் மறைவுச் செய்தியை நம்ப முடியவில்லை. இந்தச் செய்தியைக் கேட்கவே வேதனையாக இருக்கிறது. உங்களை இழந்துவாடுகிறேன் ஜோன்ஸ்.
ஆரோன் பிஞ்ச்
ஜோன்ஸ் மறைவு இப்போதும் எனக்கு அதி்ர்ச்சியாக இருக்கிறது. கடினமான நேரத்தில் ஜோன்ஸ் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். கிரிக்கெட்டின் மீது தீராத காதல் கொண்ட மனிதர்
ஜேம்ஸ் நீஷம் (நியூஸி. வீரர்)
ஜோன்ஸ் மறைவுச் செய்தியைக் கேட்கவே வருத்தமாக இருக்கிறது. கிரிக்கெட் மைதானத்தின் மீதுதான் எப்போதும் அவருக்கு விருப்பம் இருக்கும். கனடா சென்றபோது அவருடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்ததை நினைக்கிறேன்.
ஐபில் நிர்வாகம்
ஜோன்ஸ் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தத்தையும், அதிர்ச்சியையும் தருகிறது. கிரிக்கெட் மீதான அவரின் சுறுசுறுப்பு, ஆர்வம் போன்றவற்றை இழப்போம். அவரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.