ஆஸ்திேரலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ், மாரடைப்பால் மும்பையில் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 59.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் தற்போது ஐபிஎல் டி20 போட்டிகளுக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தளத்தில் வர்ணனையாளராகப் பணியாற்றி வந்தார்.
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று நாளேடுகளில் கிரிக்கெட் தொடர்பாகக் கட்டுரைகள் எழுதுவதும், வர்ணனையாளர் பணியையும் ஜோன்ஸ் செய்துவந்தார். ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளர் பணிக்காக மும்பையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஜோன்ஸ் தங்கி இருந்த நிலையில், இன்று அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரைச் சிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தும், சிகிச்சை பலனளிக்காமல் ஜோன்ஸ் உயிரிழந்தார்.
இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “ஆஸி. அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் காலமாகிவிட்டார் எனும் செய்தியை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், கடினமான நேரத்தில் தேவையான அனைத்து ஆதரவுகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் வழங்கும். ஆஸ்திரேலியத் தூதரகத்துடன் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர்கள் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.
தெற்காசியா முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் வளர்ச்சி பெறுவதற்கு ஜோன்ஸ் சிறந்த தூதராகத் திகழ்ந்தார். புதிய வீரர்களையும், அவர்களின் திறமையையும் அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தினார்.
வர்ணனையாளர் பணியில் சாம்பியனாக இருந்தார். போட்டியை அவர் வர்ணனை செய்யும் விதம் லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்துள்ளது. உலகில் உள்ள அவரின் லட்சக்கணக்கான ரசிகர்களும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகமும் ஜோன்ஸை இழக்கிறது. ஜோன்ஸின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எங்களின் பிரார்த்தனைகளைச் செலுத்துகிறோம்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸி.அணிக்காக 1984-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணிக்காக அறிமுகமான ஜோன்ஸ் இதுவரை 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 3,631 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 11 சதங்கள், 14 அரை சதங்கள் அடங்கும்.
1984-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமான ஜோன்ஸ், 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,068 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 46 அரை சதம், 7 சதங்கள் அடங்கும்.
கடந்த 1980களிலும், 1990களின் தொடக்கத்திலும் உலக கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனாக டீன் ஜோன்ஸ் அறியப்பட்டார். கடந்த 1987-ம் ஆண்டு உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியில் ஜோன்ஸ் இடம் பெற்றிருந்தார்.
உலகக் கோப்பைக்கான அணியில் டேவிட் பூன், ஜெப் மார்ஷ் ஜோடிக்கு அடுத்தாற்போல் 3-வது வீரராக ஜோன்ஸ் ஆஸி. அணியில் களமிறங்கி அனைத்து அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தார். உலகக்கோப்பை போட்டியில் 3 அரை சதங்கள் உள்பட 344 ரன்களை ஜோன்ஸ் குவித்தார்.
இந்தியாவுக்கு எதிராக ஜோன்ஸ் டெஸ்ட் போட்டியில் அடித்த சதம் மிகவும் முக்கியமானது. கடந்த 1986-ம் ஆண்டு சென்னையில் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி நடந்தது. அந்தப் போட்டி சமனில் முடிந்தது.
கடந்த 1877-ம் ஆண்டிலிருந்து 2 ஆயிரம் டெஸ்ட் போட்டிகள் விளையாடப்பட்டுள்ள நிலையில் அதில் இரு போட்டிகள் மட்டுமே டையில் முடிந்துள்ளன. அதில் முதலாவது ஆட்டம் 1960ம் ஆண்டு நடந்தபோது டை ஆனது, அதன்பின் இந்த ஆட்டம் டை ஆனது குறிப்பிடத்தக்கது.
முதலாவது டையில் முடிந்த ஆட்டம் கடந்த 1960ம் ஆண்டு காபாவில் ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகளுக்கு இடையே நடந்தது. 2-வது டையில் முடிந்தது சென்னையில் கடந்த 1986-ம் ஆண்டு நடந்த இந்தியா-ஆஸி. இடையிலான ஆட்டமாகும்.
இதில் ஜோன்ஸுக்கு சென்னையின் சூழல் உடலுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதால், வயிற்றுப்போக்கும் வாந்தியும் ஏற்பட்டது. களத்தில் பேட் செய்தபோது பலமுறை வாந்தி எடுத்தார். இதனால் அப்போது ஆஸி. அணிக்கு கேப்டனாக இருந்த ஆலன் பார்டர், ஜோன்ஸால் சூழலைக் கையாள முடியாவிட்டால், குயின்ஸ்லாந்து வீரர் கிரேக் ரிட்சியைக் களமிறக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆனால், அதன்பின் துணிச்சலாக ஆடிய ஜோன்ஸ், 210 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது மறக்க முடியாத போட்டி எனப் பல முறை அவரே பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.