ஷார்ஜாவில் நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அடித்த சிக்ஸரில் அரங்கைக் கடந்து பந்து சாலையில் விழுந்தது. இந்த பந்தை சாலையில் சென்ற ரசிகர் ஒருவர் மகிழ்ச்சியுடன் எடுத்துச் சென்றார்.
ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 4-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும், சிஎஸ்கே அணியும் மோதின. இதில் சிஎஸ்கே அணி வெற்றி பெற 217 ரன்கள் இலக்கு வைத்தது ராஜஸ்தான் அணி.
217 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்திச் சென்ற சிஎஸ்கே அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதில் 14-வது ஓவரில் கேப்டன் தோனி களமிறங்கினார். அப்போது 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் என்ற நிலையில் சிஎஸ்கே அணி இருந்தது. வெற்றிக்கு 6 ஓவர்களில் 103 ரன்கள் தேவைப்பட்டது. தொடக்கத்தில் தடுமாறிய தோனி 12 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமேசேர்த்திருந்தார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது. நிச்சயம் வெற்றி பெற முடியாது என்பதை தெரிந்து கொண்ட தோனி, ரன்ரேட்டை உயர்த்தும் நோக்கில் விளையாடத் தொடங்கினார்.
டாம் கரன் வீசிய கடைசி ஓவரில் 3 இமாலய சிக்ஸர்களை தோனி விளாசினார். இதில் தோனி அடித்த ஒரு சிக்ஸர் அரங்கிற்கு வெளியே சென்றது. பந்தின் வானில் பறந்த போக்கை கேமிராவின் கண்கள் பின்தொடர்ந்தபோது அது அரங்கிற்கு வெளியே சாலையில் சென்று விழுந்தது.
ஏறக்குறைய ரூ.8 ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்புகொண்ட சர்வதேச போட்டிகளுக்கு பயன்படும் 4-பீஸ் வெள்ளை பந்தை, சாலையில் சென்ற ரசிகர் ஒருவர் பந்து விழுந்ததைப் பார்த்து அதை ஒரு புன்னகையுடன் எடுத்துச் சென்றார்.
இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகம் ட்விட்டரில் சிறிய வீடியோ வெளியிட்டு அந்த ரசிகர் பந்தை எடுத்துச் சென்றதையும் பதிவிட்டுள்ளது. அதில் “ தோனி சிக்ஸர் அடித்த பந்தை எடுத்துச்சென்ற அதிர்ஷ்டசாலி மனிதர்” எனத் தெரிவித்துள்ளது.