விளையாட்டு

தோனி களமிறங்கும் பேட்டிங் நிலை பற்றிய கேள்வி ஒவ்வொரு ஆண்டும் எங்களிடம் கேட்கப்படுகிறது: ஸ்டீபன் பிளெமிங்கின் விளக்க முயற்சி

செய்திப்பிரிவு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி மிகவும் பின்னால் 7ம் நிலையில் களமிறங்கினார், அது தவறு என்று கவுதம் கம்பீர் கடும் விமர்சனங்களை முன்வைக்க சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தோனி சரியான டவுனில்தான் களமிறங்கியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

தோனி, தான் பேட்டிங் செய்து நீண்ட காலம் ஆகிவிட்டது, 14 நாட்கள் கரோனா தனிமைப்படுத்தலும் உதவவில்லை, எனவே பரிசோதனை முயற்சியாக சாம் கரண், ருதுராஜ், ஜடேஜா, கேதார் ஜாதவ் போன்றோரை இறக்கிப் பார்த்தோம், சரிப்பட்டு வந்தால் இதைத் தொடரலாம் இல்லையெனில் அணியின் பழைய வலிமைக்கே திரும்புவோம் என்றும் தொடரின் ஆரம்பத்தில்தான் சோதனை செய்து பார்க்க முடியும், தொடர் செல்லச்செல்ல மூத்த வீரர்கள் பொறுப்பை எடுத்துக் கொள்வார்கள் என்று தன் டவுன் ஆர்டர் சர்ச்சைக்கு நீண்ட விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில் கேப்டனின் கருத்தை எதிரொலித்த சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் குறிப்பிடும்போது தோனி 12வது ஓவரில் களமிறங்கியதாகக் கூறி அது சரியான நேரம்தான் என்றார். ஆனால் தோனி இறங்கியது 14வது ஓவரில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பிளெமிங் ஓவரைத் தவறாகக் குறிப்பிட்டார்.

ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் இதே கேள்வியை கேட்கிறீர்கள் (தோனி ஏன் பின்னால் இறங்குகிறார்? என்ற கேள்வி). அவர் 12வது ஓவரில் இறங்கினார் (உண்மையில் பிளெமிங் தவறு, 14வது ஓவரில் இறங்கினார்). அது சரியான நேரம்தான். அதற்கு ஏற்றவாறு ஆடினார்.

நிறைய கிரிக்கெட் ஆடாமல் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் வருகிறார். எனவே தோனியின் சிறந்த ஆட்டத்தை பார்க்கும் எதிர்பார்ப்பு இருக்கவே செய்யும். ஆனால் இதற்கு கொஞ்ச காலம் தேவைப்படும். ஆனால் இன்னிங்ஸ் முடிவில் அவர் நன்றாகவே பேட் செய்தார்.

ஃபாப் டுபிளெசிஸ் தொடர்ந்து ஃபார்மில் இருக்கிறார். எனவே நாங்கள் நீண்ட தொலைவில் இல்லை. உள்ளபடியே கூற வேண்டுமெனில் அணி பற்றிய கவலை பேட்டிங்கில் இல்லை.

இவ்வாறு கூறினார் ஸ்டீபன் பிளெமிங்.

SCROLL FOR NEXT