யாஷஸ்வி ஜெய்ஸ்வால் : கோப்புப்படம் 
விளையாட்டு

பானி பூரி விற்று, பிளாஸ்டிக் டென்ட் குடிசையில் வாழ்க்கை: ராஜஸ்தான் ராயல்ஸில் இடம் பெற்ற யாஷஸ்வி ஜெய்ஸ்வால் யார் தெரியுமா?

க.போத்திராஜ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம் பெற்று சதம் அடித்து அனைவரையும் திரும்பிப் பார்த்தவர்.

அவரின் திறமையைப் பார்த்துதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் ரூ.2.40 கோடிக்கு அவரை விலைக்கு வாங்கியது. சிஎஸ்கே அணிக்கு எதிரான இன்றைய முதல் ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் களமிறங்கினார்.

அதைக் காட்டிலும் கண்ணீர் வரவழைப்பது என்னவென்றால், பானி பூரி விற்று, பிளாஸ்டிக் டென்ட் குடிசையில் தங்கி வாழ்க்கை நடத்தி, இந்திய அணியில் இடம் பிடித்தவர்தான் இளம் வீரர் ஜெய்ஸ்வால்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பைப் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. இரு நாட்களுக்கு முன் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய இடதுகை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் 113 பந்துகளில் 105 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணியில் இடம் பிடிக்க ஜெய்ஸ்வால் தனது வாழ்வில் கடந்து வந்த பாதைகள் எளிமையானவை அல்ல. வறுமையிலும், போதுமான விளையாட்டு வசதிகள் இல்லாத சூழலில் பானி பூரி விற்றுக் கொண்டும், பிளாஸ்டிக் டென்ட் குடிசையில் தங்கியும் கிரிக்கெட் பயிற்சி எடுத்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், பதோகி அருகே சூர்யா நகரைச் சேர்ந்தவர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். இவரின் தந்தை சிறிய கடை நடத்தி வருகிறார். தன்னுடைய 11-வது வயதில் பிழைப்புத் தேடியும், கிரிக்கெட்டில் லட்சிய வீரராக மாற வேண்டும் என்ற நோக்கிலும் ஜெய்ஸ்வால் மும்பைக்கு வந்தார்.

ஆனால், அவருடைய ஏழ்மை காரணமாக மும்பையில் உள்ள முஸ்லிம் யுனைடெட் மைதானம் அருகே பிளாஸ்டிக் தார்ப்பாயில் ஒரு குடிசை அமைத்து ஜெய்ஷ்வால் தங்கியுள்ளார். பானி பூரி தயாரிக்கும் ஒரு கடையில் வேலை பார்த்த நேரம் போக மீதி நேரத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

ஜெய்ஸ்வாலின் பேட்டிங், பந்துவீச்சு திறமையைப் பார்த்த பயிற்சியாளர் அவருக்குப் பயிற்சி அளித்துள்ளார். அதன்பின் மும்பையில் கடந்த 2015-ம் ஆண்டு கில்ஸ் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் 319 ரன்களை ஜெய்ஸ்வால் விளாசினார்.

அதன்பின், செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் நடந்த விஜய் ஹசாரே போட்டியில் (லிஸ்ட் ஏ) ஜெய்ஸ்வால் 154 பந்துகளில் 203 ரன்கள் சேர்த்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இதையடுத்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாட இடம் கிடைத்தது. இதுவரை அரையிறுதி வரை இந்திய அணியில் விளையாடிய ஜெய்ஸ்வால் சதம் உள்பட 312 ரன்கள் குவித்து அனைவரையும் ஈர்த்துள்ளார்.

வறுமையான குடும்பத்தில் பிறந்து, பானி பூரி விற்பனை செய்து, மீதி நேரத்தில் கிரிக்கெட் பயிற்சி எடுத்து, ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு பெற்றுள்ள ஜெய்ஸ்வாலின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் பாராட்டுக்குரியது. முதல் போட்டியில் களமிறங்கும் ஜெய்ஸ்வாலுக்கு வாழ்த்துகள்.

SCROLL FOR NEXT