விளையாட்டு

சென்னை ஓபனில் 8-வது முறையாக களம் காணும் வாவ்ரிங்கா

செய்திப்பிரிவு

இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா 8வது முறையாக சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் களமிறங்குகிறார்.

2016-ம் ஆண்டுக்கான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 4 முதல் 10 வரை சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்றவரும், நடப்பு சாம்பியனுமான வாவ்ரிங்கா, ஹாட்ரிக் பட்டம் வெல்லும் முனைப்பில் களமிறங்கவிருக்கிறார்.

2015 சீசனை சென்னை ஓபனில் பட்டம் வென்று தொடங்கிய வாவ்ரிங்கா, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபனில் சாம்பியனாகி சாதித்தார். இதன்மூலம் கிளே கோர்ட்டில் நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வென்ற 2-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த சீசன் இதுவரை அவருக்கு மிகச்சிறப்பானதாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தெற்காசியாவின் ஒரே ஏடிபி போட்டியான சென்னை ஓபன் 20-வது ஆண்டாக நடைபெறவுள்ளது. இதில் வாவ்ரிங்கா பங்கேற்பதன் மூலம் போட்டி சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை ஓபனில் பங்கேற்கவிருப்பது குறித்து வாவ்ரிங்கா கூறியிருப்பதாவது: ஒரு சீசனை தொடங்குவதற்கு சென்னை ஓபன் மிகச்சிறந்த வழியாகும். சென்னை ஓபனில் 8-வது முறையாக களமிறங்க காத்திருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகள் எனக்கு கூடுதல் சிறப்புமிக்க ஆண்டாக அமைந்தன.

ஏனெனில் சென்னை ஓபனை வென்று சீசனை தொடங்கிய நான், அந்த இரண்டு ஆண்டுகளிலும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றேன். எனவே சென்னை ஓபன் போட்டி எனக்கு அதிர்ஷ்ட தேவதையைப் போன்றது. ஆண்டின் மைல்கல் போட்டியாக இருக்கும் சென்னை ஓபனில் மீண்டும் சாம்பியன் ஆவேன். வரும் ஆண்டும் மேலும் சிறப்பானதாக அமையும் என நம்புகிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT