பவுல்டு ஆன விஜய் சங்கர். 
விளையாட்டு

விஜய் சங்கர் இறங்கிய போது கோலி, டிவில்லியர்ஸ் சொன்னது ‘ஒர்க் அவுட்’ ஆனது: ஆட்ட நாயகன் சாஹல் மனம் திறப்பு

செய்திப்பிரிவு

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோலி தலைமையில் வெற்றி பெற்றது.

இதற்குப் பிரதான காரணம் 121/2 என்று ஹைதராபாத் இன்னொரு உதையை கோலி அணிக்கு அளிக்க தயாராக இருந்த நிலையில் சாஹல் திருப்பு முனை ஏற்படுத்தினார், அவர் இந்தப் போட்டியில் மணீஷ் பாண்டே, பேர்ஸ்டோ, விஜய் சங்கர் ஆகியோரை வீழ்த்தி பனிப்பொழிவிலும் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தனது 18 பந்துகளில் அவர் விட்டுக்கொடுத்தது ஒரு பவுண்டரியே. இந்நிலையில் ஆட்டம் முடிந்து ஆட்ட நாயகன் விருது நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

பாண்டேவுக்கு வீசும் போது ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீச முயன்றேன். ஆனால் ஸ்டம்புக்குள் போட முடிவெடுத்தேன் ஏனெனில் லெக் திசையில் என் ஸ்பின்னுக்கு எதிர்த்திசையில் ஆடுவது கடினம். பேர்ஸ்டோவுக்கு ஃபுல் லெந்தில் லெக் ஸ்டம்புக்கு சற்று வெளியே வீசினேன், ஏனெனில் பந்து வெளியே திரும்பும் போது அதை எதிர்த்து எதிர்த்திசையில் பேர்ஸ்டோ தூக்கி அடித்தால் அது ரிஸ்க் ஆகும்.

விஜய் சங்கர் இறங்கும்போது விராட் கோலி, ஏ.பி.டிவில்லியர்ஸ் இருவரும் என்னிடம் வந்து கூக்ளி வீசுமாறு சொன்னார்கள் அது பிரமாதமாக ஒர்க் அவுட் ஆனது. என் கையில் மண்ணைக் கொஞ்சம் எடுத்துத் தேய்த்துக்கொண்டேன், ஏனெனில் பனியினால் பந்து வழுக்கி விடக் கூடாதல்லவா?, இவ்வாறு கூறினார் சாஹல்.

SCROLL FOR NEXT